UPDATED : டிச 14, 2025 11:19 PM
ADDED : டிச 14, 2025 11:13 PM

மும்பை: மும்பை வந்த மெஸ்ஸிக்கு, ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் லியோனல் மெஸ்ஸி 38. இவரது தலைமையிலான அர்ஜென்டினா அணி, 2022ல் 'பிபா' உலக கோப்பை வென்றது. 'கோட் இந்தியா டூர் 2025' என்ற திட்டத்தின் படி, மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
முதல் நாளில், கோல்கட்டாவில் ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். ஐதராபாத் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தன. இரண்டாம் நாளான நேற்று, ஐதராபாத்தில் இருந்து மும்பை வந்தார் மெஸ்ஸி. விமான நிலையத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் தாஜ் ஓட்டலுக்கு சென்று சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். மாலை 4:00 மணியளவில் கிரிக்கெட் கிளப் ஆப் இந்தியா (சி.சி.ஐ.,) அமைந்துள்ள பிரபோர்ன் மைதானத்தில் நடந்த 'கோட் கப்' நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
உற்சாக வரவேற்பு:மாலை 5:00 மணிக்கு வான்கடே மைதானத்திற்கு வந்த மெஸ்ஸிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. மைதானத்தில் இருந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் உற்சாகமாக மெஸ்ஸியை வரவேற்றனர். இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
சச்சினுடன் சந்திப்பு: இந்திய கால்பந்து வீரர் சுனில் செத்ரி, முன்னணி பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்ற கண்காட்சி கால்பந்து போட்டி நடந்தது. போட்டியின் முடிவில் இரு அணியினருக்கும் வாழ்த்து தெரிவித்த மெஸ்ஸி, சுனில் செத்ரியை கட்டித்தழுவினார். பின் மைதானத்தை வலம் வந்த மெஸ்ஸி, கேலரியை நோக்கி பந்தை உதைத்து, ரசிகர்களுக்கு பரிசு வழங்கினார். மைதானத்தில் இருந்த இளம் வீராங்கனைகளுடன் கால்பந்து விளையாடினார் மெஸ்ஸி. பின் சச்சின், மெஸ்ஸி, சாரஸ் சந்தித்துக் கொண்டனர். அப்போது சச்சின், தனது ஜெர்சியை மெஸ்ஸிக்கு வழங்கினார்.
'பேஷன் ஷோ': இரவு 7:00 மணிக்கு மேல், தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்காக நடத்தப்பட்ட தனியார் 'பேஷன் ஷோ' நிகழ்ச்சியில் மெஸ்ஸி பங்கேற்றார். முடிவில், 2022ல் கத்தாரில் நடந்த 'பிபா' உலக கோப்பையில் மெஸ்ஸி பயன்படுத்திய ஜெர்சி உள்ளிட்ட பொருட்கள் ஏலம் விடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஜாக்கி ஷெராப், ஜான் ஆப்ரஹாம், கரீனா கபூர் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.
பலத்த பாதுகாப்பு
கோல்கட்டாவில் நடந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மும்பையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மைதானத்திற்கு வந்த ரசிகர்களுக்கு நிறைய கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. தண்ணீர் பாட்டில், உலோக பொருட்கள், நாணயங்கள் கொண்டு வர தடைவிதிக்கப்பட்டது. மேலும் கூட்டத்தை கண்காணிக்க, கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டன.
டிக்கெட் விலை
மும்பை, வான்கடே மைதானத்தில் நடந்த கண்காட்சி போட்டியை காண, டிக்கெட் விலை ரூ. 8850 முதல் ரூ. 14750 வரை நிர்ணயிக்கப்பட்டது.
பிரதமருடன் சந்திப்பு
இன்று காலை 10.45 மணியளவில் டில்லி வரவுள்ள மெஸ்ஸி, நட்சத்திர ஓட்டலில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கிறார். அதன்பின் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்திக்கிறார். பின், இந்தியாவுக்கான அர்ஜென்டினா துாதர் மரியானோ அகஸ்டின் கவுசினோ, இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த், ராணுவ தளபதி உபேந்திர திவேதி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளை சந்திக்க உள்ளார்.
மதியம் 3:30 மணியளவில் டில்லி, பெரோஷா கோட்லா மைதானத்தில் நடக்கும் கண்காட்சி போட்டியில் முன்னணி இந்திய பிரபலங்களுடன் பங்கேற்க உள்ளார். அப்போது இரண்டு கிரிக்கெட் வீரர்கள், மெஸ்ஸிக்கு நினைவு பரிசு வழங்கவுள்ளனர். அவர்களுக்கு, தனது கையெழுத்திட்ட ஜெர்சியை மெஸ்ஸி வழங்குவார். பின், 22 சிறுவர்களுக்கு கால்பந்து பயிற்சி அளிக்கவுள்ளார். அதன்பின் நேரடியாக விமான நிலையம் செல்லும் மெஸ்ஸி, தனது இந்திய பயணத்தை நிறைவு செய்யவுள்ளார்.

