/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
ஐ.எஸ்.எல்., பிரச்னைக்கு தீர்வு * உச்ச நீதிமன்றம் உத்தரவு
/
ஐ.எஸ்.எல்., பிரச்னைக்கு தீர்வு * உச்ச நீதிமன்றம் உத்தரவு
ஐ.எஸ்.எல்., பிரச்னைக்கு தீர்வு * உச்ச நீதிமன்றம் உத்தரவு
ஐ.எஸ்.எல்., பிரச்னைக்கு தீர்வு * உச்ச நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஆக 22, 2025 10:54 PM

புதுடில்லி: அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் (ஏ.ஐ.எப்.எப்.,), கடந்த 2013ல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.,) தொடர் துவங்கப்பட்டது. இத்தொடரை நடத்த கால்பந்து விளையாட்டு மேம்பாட்டு நிறுவனத்துடன் (எப்.எஸ்.டி.எல்.,), 15 ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இது, வரும் டிச. 8, 2025ல் முடிகிறது.
ஆனால் ஏ.ஐ.எப்.எப்., நிர்வாக விதிகள் குறித்த வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் வரை, புதிய ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டாம் என கடந்த ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் ஏ.ஐ.எப்.எப்., மற்றும் எப்.எஸ்.டி.எல்., என இரு தரப்பிலான புதிய ஒப்பந்தம் (எம்.ஆர்.ஏ.,) குறித்து இறுதி முடிவு எடுக்கப் படாமல் இருந்தது.
புதிய ஒப்பந்தம் இல்லாததால் 12வது சீசனை (2025-26) நிறுத்தி வைப்பதாக எப்.எஸ்.டி.எல்., அறிவித்தது. சென்னை, பெங்களூரு, ஒடிசா உள்ளிட்ட 11 அணி நிர்வாகம் கால்பந்து தொடர்பான பணிகளை நிறுத்தின. இதனால், வீரர்கள், பயிற்சியாளர்கள், பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. ஐ.எஸ்.எல்., தொடர்பான அனைவரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டன.
இதுகுறித்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில், நீதிபதிகள் ஸ்ரீ நரசிம்ஹா, ஜாய்மால்யா பாக்சி இடம் பெற்ற சிறப்பு 'பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. அப்போது,' ஏ.ஐ.எப்.எப்., மற்றும் எப்.எஸ்.டி.எல்., இணைந்து பேசி, ஒரு வாரத்துக்குள் புதிய ஒப்பந்தம் குறித்த சர்ச்சைக்கு தீர்வு காண வேண்டும்,' என உத்தரவிட்டது. வழக்கு மீண்டும் ஆக. 28ல் விசாரணைக்கு வரவுள்ளது.
இதனால் விரைவில் ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடர் துவங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.