/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
டெஸ்ட் போட்டிக்கு புஜாரா அழகு: பிரதமர் மோடி பாராட்டு
/
டெஸ்ட் போட்டிக்கு புஜாரா அழகு: பிரதமர் மோடி பாராட்டு
டெஸ்ட் போட்டிக்கு புஜாரா அழகு: பிரதமர் மோடி பாராட்டு
டெஸ்ட் போட்டிக்கு புஜாரா அழகு: பிரதமர் மோடி பாராட்டு
ADDED : ஆக 31, 2025 10:32 PM

புதுடில்லி: ''நீண்ட நேரம் பேட் செய்யும் திறன் பெற்ற புஜாரா, டெஸ்ட் கிரிக்கெட்டின் அழகை நினைவுபடுத்தினார்,'' என பிரதமர் மோடி பாராட்டினார்.
குஜராத்தின் ராஜ்கோட்டை சேர்ந்தவர் புஜாரா. கடந்த 2010ல் இந்திய அணியில் அறிமுகமானார். டெஸ்டில் சிறந்த 'மிடில்-ஆர்டர்' பேட்டராக ஜொலித்தார். டெஸ்ட் கிரிக்கெட் தனித்துவமானது. இதன் அழகை ரசிகர்களுக்கு உணர வைத்தவர் புஜாரா. துாணாக நின்று ஆடி அணியை மீட்பதில் வல்லவர். 103 டெஸ்ட் (7195 ரன், 19 சதம்), 5 ஒருநாள் போட்டிகளில் (51 ரன்) விளையாடினார். சமீபத்தில் அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார். இனி வர்ணனையாளராக அசத்த உள்ளார்.
ஆஸி., மண்ணில்: புஜாராவுக்கு பிரதமர் மோடி அனுப்பியுள்ள கடிதம்:
நீங்கள் ஓய்வு பெற்றதை அறிந்தேன். உங்கள் கிரிக்கெட் வாழ்க்கை அற்புதமானது. ஒரு நாள் போட்டி, 'டி-20' என குறுகிய வடிவ போட்டிகள் ஆதிக்கம் செலுத்தும் காலத்தில், நீங்கள் 5 நாள் நடக்கும் டெஸ்டின் அழகை நினைவுபடுத்தினீர்கள். களத்தில் நீண்ட நேரம் பேட் செய்யும் திறன் பெற்ற நீங்கள், இந்திய பேட்டிங் வரிசையின் அச்சாணியாக திகழ்ந்தீர்கள்.வெளிநாடுகளில் மன உறுதியுடன் விளையாடினீர்கள். உதாரணமாக, ஆஸ்திரேலிய டெஸ்ட் தருணங்கள் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கும். ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க முதல் டெஸ்ட் தொடர் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தீர்கள். எதிரணியின் வலிமையான பந்துவீச்சை துணிச்சலாக சமாளித்தவிதம் பாராட்டுக்குரியது.
நீங்கள் களத்தில் இருக்கும் போது ரசிகர்கள், சக வீரர்கள் நிம்மதியாக இருப்பர். அணி பாதுகாப்பான நபரின் கையில் உள்ளது என உணர்ந்தனர். உண்மையிலேயே இந்த பாரம்பரியம் வியக்க வைக்கிறது.
சர்வதேச வீரராக இருந்த போதும், உள்ளூர் முதல் தர கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் அளித்தீர்கள். சவுராஷ்டிரா அணிக்காக விளையாடினீர்கள். நீங்கள் பிறந்த ராஜ்கோட்டை, கிரிக்கெட் வரைபடத்தில் இடம்பெறச் செய்தீர்கள்.
வர்ணனையாளராக உங்கள் கருத்தை கேட்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.
இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
புஜாரா நன்றி
புஜாரா 37, கூறுகையில்,''பிரதமர் மோடியின் பாராட்டு கடிதத்தை பெரும் கவுரவமாக கருதுகிறேன். அவருக்கு எனது நன்றி,''என்றார்.