/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஒரே ஓவரில் 5 விக்கெட் * இந்தோனேஷிய பவுலர் சாதனை
/
ஒரே ஓவரில் 5 விக்கெட் * இந்தோனேஷிய பவுலர் சாதனை
ADDED : டிச 23, 2025 11:35 PM

பாலி: சர்வதேச 'டி-20' ல் ஒரே ஓவரில் 5 விக்கெட் சாய்த்து சாதனை படைத்தார் இந்தோனேஷியாவின் பிரியன்தனா.
இந்தோனேஷியா சென்றுள்ள கம்போடிய அணி ஐந்து போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி பாலியில் நடந்தது. 'டாஸ்' வென்ற கம்போடியா பீல்டிங் தேர்வு செய்தது.
இந்தோனேஷிய அணிக்கு பிரியன்தனா (6), தர்மா கேசுமா ஜோடி துவக்கம் தந்தது. தர்மா சதம் விளாசினார். இந்தோனேஷிய அணி 20 ஓவரில் 167/5 ரன் எடுத்தது. தர்மா (110), கேப்டன் தனில்சன் (13) அவுட்டாகாமல் இருந்தனர்.
கம்போடிய அணிக்கு ஷா அப்ரார், மார்செல்லி (0) ஜோடி துவக்கம் தந்தது. கேப்டன் லுக்மான் பட் 30 பந்தில் 48 ரன் எடுத்தார். கம்போடியா ஒரு கட்டத்தில் 15 ஓவரில் 106/5 ரன் என இருந்தது.
பிரியன்தனா அபாரம்
போட்டியின் 16 வது ஓவரை வீசினார் பிரியன்தனா. வேகத்தில் மிரட்டிய இவர், முதல் மூன்று பந்தில் ஷா அப்ரார் (37), நிர்மல்ஜித் சிங் (0), ராதானக்கை (0) வெளியேற்றி, 'ஹாட்ரிக்' விக்கெட் வீழ்த்தினார். 5, 6 வது பந்தில் மோங்தரா (0), வன்னக்கை (0) அவுட்டாக்கினார். கம்போடிய அணி 16 ஓவரில் 107 ரன்னில் சுருண்டது. இந்தோனேஷியா 60 ரன்னில் வெற்றி பெற்றது. பிரியன்தனா ஒரு ஓவரில் 1 ரன் மட்டும் கொடுத்து, 5 விக்கெட் சாய்த்து, சாதனை படைத்தார்.
முதன் முறை
சர்வதேச 'டி-20'ல் ஒரு ஓவரில் 5 விக்கெட் வீழ்த்திய முதல் பவுலர் ஆனார் பிரியன்தனா. முன்னதாக சர்வதேச 'டி-20'ல் இலங்கையின் மலிங்கா (2019, எதிர்-நியூசி.,), ரஷித் கான் (2019, அயர்லாந்து) உள்ளிட்ட 7 பேர், உள்ளூர் 'டி-20'ல் 7 என மொத்தம் 14 முறை ஒரே ஓவரில் 4 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.
* உள்ளூர் ஆண்கள் 'டி-20'ல் அல் அமின் ஹொசைன் (வங்கதேசம், 2013-14), கர்நாடகாவின் அபிமன்யு மிதுன் (2019-20) என இருவர் ஒரு ஓவரில் 5 விக்கெட் சாய்த்தனர்.

