ADDED : டிச 23, 2025 11:38 PM

மெல்போர்ன்: ஆஷஸ் டெஸ்ட் தொடரின் கடைசி இரு போட்டியில் இருந்து கம்மின்ஸ் விலகினார்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று டெஸ்டில் வென்ற ஆஸ்திரேலியா 3-0 என்ற முன்னிலையுடன் தொடரை வசப்படுத்தியது. நான்காவது போட்டி, வரும் டிச. 26ல் மெல்போர்னில் 'பாக்சிங் டே' டெஸ்ட் ஆக துவங்குகிறது.
இப்போட்டிக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது.
கடந்த ஜூன் மாதம் முதல் முதுகு வலியால் அவதிப்படும் 'ரெகுலர்' கேப்டன் கம்மின்ஸ் 32, மூன்றாவது போட்டியில் மட்டும் பங்கேற்றார். தற்போது கடைசி 2 டெஸ்டில் இருந்தும் விலகினார். தொடை பின்பகுதி காரணமாக சுழற்பந்து வீச்சாளர் லியானும் சேர்க்கப்படவில்லை.
மூன்றாவது டெஸ்டில் விளையாடாத ஸ்டீவ் ஸ்மித், மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
அணி விபரம்: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), போலந்து, அலெக்ஸ் கேரி, பிரண்டன் டாக்கெட், கேமரான் கிரீன், டிராவிஸ் ஹெட், இங்லிஸ், கவாஜா, லபுசேன், மர்பி, மைக்கேல் நேசர், ரிச்சர்ட்சன், ஸ்டார்க், வெதரால்டு, வெப்ஸ்டர்.
வீரர்களிடம் விசாரணை
இதனிடையே 2, 3வது டெஸ்டுக்கு இடையில் கிடைத்த ஓய்வில், 'ரிலாக்சிற்காக' இங்கிலாந்து அணியினர் வடக்கு பிரிஸ்பேனில் உள்ள நுாசா என்ற 'ரிசார்ட் டவுனுக்கு' சென்றனர். இங்கு அளவுக்கு அதிகமாக மது அருந்தினர். இதுகுறித்து இங்கிலாந்து அணி இயக்குனர் ராப் கீ விசாரணை நடத்துகிறார்.

