ADDED : ஆக 16, 2025 10:51 PM

பெகா: ஆஸ்திரேலியாவில் 'பெகா' ஓபன் சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில் இந்தியாவின் இளம் வீராங்கனை அனாஹத் சிங் 17, களமிறங்கினார்.
ஆசிய விளையாட்டில் பதக்கம் (வெண்கலம்) வென்ற இவர், அரையிறுதியில் எகிப்தின் வலிமையான நுார் ஹபாகியை எதிர்கொண்டார். முதல் செட்டை 10-12 என இழந்த அனாஹத், அடுத்த இரு செட்டை 11-5, 11-5 என கைப்பற்றினார். 4வது செட்டை 10-12 என போராடி தோற்றார். 5வது செட்டில் சுதாரித்த அனாஹத் 11-7 என வென்றார்.
54 நிமிடம் நீடித்த இப்போட்டியில் அனாஹத் 3-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார்.
சர்வதேச ஸ்குவாஷ் அரங்கில், கடந்த 12 மாதத்தில் 9 கோப்பை உட்பட, 18 தொடரில் 12ல் சாதித்துள்ளார் அனாஹத். இன்று பைனலில் சாதித்தால் 13வது கோப்பை வெல்லலாம்.
நேற்று நடந்த மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் ஆகான்ஷா, எகிப்தின் ஹனி ஹிபிபா மோதினர். இதில் ஆகான்ஷா 1-3 என்ற (9-11, 11-7, 10-12, 6-11) கணக்கில் தோல்வியடைந்தார்.