/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நில அளவை பதிவேடுகள் துறையில் காலியிடங்கள்... நிரப்பப்படுமா?: உச்சம் முதல் கடைநிலை வரை அதிகாரிகளுக்கு பணிச்சுமை
/
நில அளவை பதிவேடுகள் துறையில் காலியிடங்கள்... நிரப்பப்படுமா?: உச்சம் முதல் கடைநிலை வரை அதிகாரிகளுக்கு பணிச்சுமை
நில அளவை பதிவேடுகள் துறையில் காலியிடங்கள்... நிரப்பப்படுமா?: உச்சம் முதல் கடைநிலை வரை அதிகாரிகளுக்கு பணிச்சுமை
நில அளவை பதிவேடுகள் துறையில் காலியிடங்கள்... நிரப்பப்படுமா?: உச்சம் முதல் கடைநிலை வரை அதிகாரிகளுக்கு பணிச்சுமை
ADDED : செப் 01, 2025 11:37 PM

புதுச்சேரி: நில அளவை துறையில் பீல்டு சர்வேயர் உள்ளிட்ட முக்கிய பதவிகள் அனைத்தும் நீண்ட நாட்களாக காலியாக உள்ளதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலுக்கு முன்பாக இப்பணியிடங்களை நிரப்ப கவர்னர், முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை, அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கீழ் செயல்படும் மிக முக்கிய துறை. இத்துறை, நில அளவை, நில ஆவணங்களை பராமரித்தல், பட்டா மாறுதல், நில எல்லைகளை வரையறுத்தல் போன்ற பல்வேறு முக்கிய பணிகளை மேற்கொள்கிறது. மேலும், இந்த துறை நில அளவை தொடர்பான சேவைகளை பொதுமக்களுக்கு அளிக்கிறது.
சமீபகாலமாக, நில அளவைக்காக பொதுமக்கள் விண்ணப்பித்தால், பணியாளர்கள் பற்றாக்குறையால் ஏமாற்றமே மிஞ்சுகின்றது. ஒவ்வொரு மட்டத்திலும் இன்றுபோய்.. நாளை வா என்ற பதிலே கிடைக்கின்றது. சில நேரங்களில் நில அளவைக்காக பல மாதம் கூட காத்திருக்க வேண்டியுள்ளது.
எல்லாமே காலி நிள அளவை துறையில் இன்ஸ்பெக்டர் ஆப் சர்வே, சப் இன்ஸ்பெக்டர் ஆப் சர்வே, துணை சர்வேயர், பீல்டு சர்வேயர், பீல்டு அசிஸ்டண்ட், டெக்னிக்கல் ஆபிசர், மேனேஜர் டெக்னிக், வரைவாளர் என முக்கிய பதவிகள் உள்ளன. இந்த பதவிகளில் உச்சம் முதல் அடிமட்டம் வரை அனைத்துமே பல ஆண்டுகளாக காலியாக கிடக்கின்றன. நிள அளவை துறையை பொருத்தவரை 158 பதவிகள் உள்ளன. இதில் 71 முக்கிய பதவிகள் காலியாக கிடக்க, 87 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். வேறுவழியின்றி இவர்கள் தான் அனைத்து பணிகளையும் செய்ய வேண்டியுள்ளதால், துறையில் உச்சம் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை அனைவருக்குமே பணிச்சுமை ஏற்பட்டுள்ளது.
கேட்டது 46...கொடுத்தது...2 பொதுமக்களுக்கான நிலத்தை அளந்து கொடுக்க 'பீல்டு சர்வேயர்' பணியிடம் முக்கியம். நில அளவை துறையில் 46 பணியிடங்கள் இதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் வெறும் 2 பீல்டு சர்வேயர் மட்டுமே பணியில் உள்ளனர். 44 பீல்டு சர்வேயர் பணியிடங்கள் காலியாக உள்ளது. பணியில் உள்ள 2 பேர் மட்டுமே, புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் என நான்கு பிராந்தியங்களையும் சேர்த்து நில அளவை செய்து தர வேண்டும். அத்துடன் ஆதிதிராவிடர் துறை, பொதுப்பணித் துறை என முக்கிய அரசு துறைகள் அழைக்கும் போதெல்லாம் அங்குபோய் அளந்து கொடுத்துவிட்டு வர வேண்டும். இந்த 2 பேரை வைத்துக்கொண்டு மாநிலம் முழுவதும் நில அளவை செய்திட முடியுமா என்பதே சமானிய மக்களின் கேள்வியாக உள்ளது.
இது என்ன கணக்கு? அரசின் பல துறைகள் அனைத்தும் 'அப்டேட்' ஆகியுள்ளன. காலத்துகேற்ப புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் நில அளவை துறை மட்டும் பல ஆண்டுகளில் பின்தங்கி இருக்கின்றது. 1969 ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பணியிடங்களை வைத்துக் கொண்டு தான் இன்று வரைக்கும் சமாளித்து வருகின்றது. இதுவே பெரிய சிக்கலாக உள்ளது.
ஒரு காலத்தில் நகரத்தில் ஒருவரிடம் 5 ஏக்கர் நிலம் இருந்தது என்றால், இன்றைக்கு அந்த இடம் பல தலைமுறைகள் கைமாறி, பல உட்பிரிவின் மனைகளாகவும், வீடுகளாகவும் உருவெடுத்துவிட்டன. இப்படி உட்பிரிவுகள் பல மடங்காக அதிகரித்துள்ள சூழ்நிலையில் நில அளவையர்கள் அதற்கேற்ப அதிக எண்ணிக்கையில் அதிகரித்து இருக்க வேண்டும்.
ஆனால் நில அளவை துறையில் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படாத சூழ்நிலையில் இருப்பதை வைத்து சமாளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுவே நில அளவை செய்து கொடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டு, பொதுமக்களின் சேவை பணிகள் அனைத்தும் முடங்குவதற்கும் முக்கிய காரணமாக உள்ளது.
சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே நில அளவை துறையில் புதிய பணியிடங்களை காலத்துகேற்ப கூடுதலாக உருவாக்கி, அனைத்து காலி பணியிடங்களை விரைவாக நிரப்ப கவர்னர், முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.