/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஞானியர்கள் தங்களை தாங்களே வென்று கொண்டவர்கள்
/
ஞானியர்கள் தங்களை தாங்களே வென்று கொண்டவர்கள்
ADDED : ஏப் 09, 2025 04:50 AM
புதுச்சேரி : முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் கடந்த 3ம் தேதி முதல் ஸ்ரீமத் ராமாயண நவாக உபன்யாசம் நடந்து வருகின்றது.
நேற்றைய ஆறாம் நாள் உபன்யாசத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் சொற்பொழிவாற்றியதாவது:
தன்னிடம் கெஞ்சியும், மிரட்டியும் பேசிய ராவணனின் அகம்பாவ பேச்சுக்களை மறுத்து சீதா பிராட்டி அவனுக்கு ஸ்ரீ ராமனிடம் சரணடைந்து உயிர் பிழைத்துக்கொள் என்று உபதேசித்தாள். இதையெல்லாம் பார்த்து கொண்டு இருந்த அனுமான் ஆனந்த கண்ணீர் வடித்தார். தேவியிடம் சேதி சொல்ல சமயம் நோக்கிக் காத்துக் கொண்டிருந்தார்.
அப்போது, சீதா பிராட்டி தன் நிலை குறித்து வருந்துவதை காண்கிறார். மாற்றான் கொடுத்த உயிர் பிச்சையில் இனி ஒரு நொடியும் வாழ்வேனோ என மனம் உடைந்து போன பிராட்டி, விரக்தியின் உச்சியில் உயிரை மாய்த்துக் கொள்வதே மேல் என்று துணிந்து, தன் செயலுக்கு வேதாந்தமாக நியாயம் சொல்லிக் கொள்கிறாள்.
ஞானியர்கள் தங்களைத் தாங்களே வென்று கொண்டவர்கள். ஆத்ம ஞானம் வரப் பெற்றவர்கள். அவர்களுக்கு வேண்டப்பட்டவை, வேண்டப்படாதவை என்ற எந்த பாகுபாடும் இல்லை. விரும்பப்பட்டவற்றால் துக்கம் ஏற்படுவதில்லை. விரும்பப்படாதவற்றால் பயம் ஏற்படுவதில்லை.
ஸ்ரீராமன் பற்று விட்டு இருக்கிறாரோ என்று சீதா பிராட்டி நினைத்து கண் கலங்கி நிற்கின்றாள். இந்த தத்துவத்தை சீதா பிராட்டி தனக்குத் தானே சொல்லிக் கொண்ட கீதோபதேசமாக அனுபவிக்கலாம்.
தன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்து, தன்குழல் முடியையே கயிராக சுருக்கிட்டு அந்த சிம்சுபா மரக் கிளையில் தூக்கிட்டுக் கொள்ள முயன்றாள்.தேவியின் நிலையை உணர்ந்த அனுமான், தவிக்கிறார். தேவி பிராணத் தியாகம் பண்ணிக் கொள்ளத் துணிந்து விட்டாளே.
தேவியை எப்படி தடுத்து நிறுத்துவது என அனுமான் பதறுகிறார். பின் சமயோஜிதமாக, ராம நாமத்தையும், ராமனின் பிரபாவத்தையும் மிருதுவான குரலில், பிராட்டி கேட்கும்படி கம்பிரமாகச் சொல்ல ஆரம்பித்தார்.
தேவியின் செவியில் ராமநாமம் தேனாகப் பாய்ந்தது. ராமநாமம் வந்த திசையை பார்க்க, அனுமான் பவ்யமாக தேவியின் முன் வந்து சேவித்து, தான் ராம தூதன் என்பதை சொல்லி தேவியின் கலக்கத்தை போக்குகிறார்.
அப்போது இறந்து போனவனுக்கு மீண்டும் உயிர் வந்தது போலவும் பிராட்டி ராமனின் மோதிரத்தைக் கண்டு ஆனந்தப்பட்டாள்.
அடுத்து சீதாபிராட்டி, தான் வைத்திருந்த சூடாமணியைக் கொடுத்து ராமனிடம் காண்பிக்கும்படி தெரிவித்தார். இன்னும் ஒரு மாதம் தான் உயிர் தரிப்பேன். ஒரு மாதத்தில் ஸ்ரீ ராமன் என்னை மீட்டுச் செல்லாவிடில் நான் இறப்பது உறுதி என்பதால், எனக்கு கங்கைக் கரையில் இறுதிக் கடன் செய்யும்படி ராமனிடம் விண்ணப்பியுங்கள்.
இவ்வாறு அவர் உபன்யாசம் செய்தார்.

