/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
துாக்கில் போடுங்கள்... பொதுமக்கள் ஆவேசம்
/
துாக்கில் போடுங்கள்... பொதுமக்கள் ஆவேசம்
ADDED : மார் 08, 2024 06:44 AM

சுதா, 50, பூ விற்கும் பெண், முத்தியால் பேட்டை:
இந்த கொடூர செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும். இதுபோன்ற ஆட்களை சாலையில் நிற்க வைத்து தண்டனை தர வேண்டும். பெண் குழந்தைகளை வைத்திருப்பவர்களுக்கு மிகப்பெரிய அச்சம் ஏற்பட்டிருக்கிறது.
இதற்கான பின்புலமாக, கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்கள் உள்ளதாக தெரிகிறது. அதை முழுவதும், ஒழிப்பதற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.
கவுசல்யா, 25, தொழில் முனைவோர், சின்ன கோட்டக்குப்பம்:
இத்தனை பெரிய கொடூரத்தை அரங்கேற்றிய குற்றவாளிகளை துாக்கில் போட வேண்டும். அதுதான் அவர்களுக்கு தரும், அதிகபட்ச தண்டனையாக இருக்கும். போதைப்பொருட்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை, பெரிய அளவில் புழக்கத்தில் இருந்ததாக தெரியவில்லை. ஆனால், தற்போது 'கஞ்சா' என்றாலே, புதுச்சேரி தான் என்று சொல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
மேகலா, 40, இல்லத்தரசி, லாஸ்பேட்டை:
தற்போது, கஞ்சா புழக்கம், பள்ளி மாணவர்கள் வரை வந்து விட்டது. இந்த செயலில் ஈடுபடும் மாணவர்களை ஆசிரியர்கள் கண்டித்தால், அவர்கள் ஆசிரியர்களையே மிரட்டும் அளவிற்கு உள்ளனர்.
இதற்கெல்லாம், அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். வீட்டில் குழந்தைகளை வைத்திருப்பவர்களுக்கு, மிகப்பெரிய அச்சம் ஏற்பட்டுள்ளது. குற்றவாளிகளை துாக்கில் போட்டால் தான், மற்றவர்களுக்கு மிகப்பெரிய பயம் இருக்கும்.
குமாரி, 40, டைலர், லாஸ்பேட்டை:
அந்த குழந்தை எவ்வளவு வலி, வேதனைகளை அனுபவித்ததோ, அதை விட அதிமாக, உச்சக்கட்ட வலியை, குற்றவாளிகள் அனுபவிக்க வேண்டும். புதுச்சேரியில் நிலவும் சமூக சீர்கேடுகளுக்கும், குற்றங்களுக்கும் மிக மிக முக்கிய காரணமே, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் நடமாட்டம் தான். அதனால் அதை ஒழித்தாலே, பாதிக்கும் மேலான குற்றங்கள் இங்கு குறைந்து விடும்.
சசி, 40, பூக்கடை வியாபாரி, புதுச்சேரி :
அந்த குழந்தையின் பெற்றோர் படும் வேதனையை, நாங்களும் அனுபவிக்கிறோம். கடந்த நான்கு நாட்களாக, சொல்ல முடியாத சோகம், எங்களை சுழன்றுடித்து கொண்டிருக்கிறது. பெண் குழந்தைகளை வைத்திருப்பவர்கள், வீட்டு படிக்கட்டை தாண்டி, அவர்களை வெளியே அனுப்பவே பயமாக இருக்கிறது. குற்றவாளிகளுக்கு துாக்கு தண்டனை கொடுக்க வேண்டும். அப்படி இல்லை எனில், பாதிக்கப்பட்டவர்களிடம், குற்றவாளிகளை ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைத்தால், தேவையான தண்டனையை அவர்களே கொடுத்து விடுவார்கள்.
பரமேஸ்வரி, 50, இளநீர் வியாபாரி, புதுச்சேரி:
குற்றவாளிகளுக்கு உச்சக்கட்ட தண்டனை கிடைக்க வேண்டும். இந்த உலகத்தில் வாழ்வது கொடூரமானது என்ற நிலையை குற்றவாளிகளுக்கு ஏற்படுத்தி விட வேண்டும். அவர்களுக்கு, துாக்கு தண்டனையும், ஆயுள் தண்டனையும் வேண்டாம். ஏனென்றால், அவர்களின் மரணம், சாதாரணமானதாக இருக்கக்கூடாது. போலீசாரின் அணுகுமுறை இந்த விவகாரத்தில் மிக மிக மோசம்.

