/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாணவர் தற்கொலை : போலீசார் விசாரணை
/
மாணவர் தற்கொலை : போலீசார் விசாரணை
ADDED : நவ 04, 2025 09:52 PM
புதுச்சேரி: பிளஸ் 2 மாணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, தேங்காய்திட்டு, நேரு நகர், 2வது தெருவைச் சேர்ந்தவர் மாயகிருஷ்ணன்; தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி விஜயலட்சுமி,49; ஜிப்மரில் நர்சிங் அதிகாரி. இவர்களது இரண்டாவது மகன் சாந்தரூபன்,16; தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
இவர், கடந்த 31ம் தேதி பள்ளியில் கொடுத்த ேஹாம் ஒர்க் செய்யாததால், பெற்றோரை அழைத்து வருமாறு ஆசிரியர் கூறியுள்ளார்.
இதுகுறித்து சாந்தரூபன், தனது தந்தை வெளியூர் சென்றிருந்ததால், கடந்த 2ம் தேதி தனது தாயாரிடம் கூறியுள்ளார். அதற்கு அவரும், வருவதாக கூறிவிட்டு அன்று இரவு பணிக்கு சென்றுவிட்டார். மறுநாள் 3ம் தேதி காலை 5:30 மணிக்கு, விஜயலட்சுமி, சாந்தரூபனுக்கு போன் செய்து, காலையில் கிளம்பி நீ பள்ளிக்கு செல், நான் இரவு பணி முடித்துவிட்டு பள்ளிக்கு வருவதாக கூறியுள்ளார். அதன்பிறகு காலை 7:30 மணிக்கு விஜயலட்சுமி, சாந்தரூபனுக்கு போன் செய்தபோது அவர் எடுக்கவில்லை.
சந்தேகமடைந்து காலை 8:00 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு உட்புறம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. ஜன்னல் வழியே பார்த்தபோது, சாந்தரூபன் மின்விசிறியில் துாக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.
உடன் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து, சாந்தரூபனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு, டாக்டர் பரிசோதித்து அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

