ADDED : ஏப் 29, 2026 06:52 PM
இப்பகுதியில் கடந்த 22 ம் தேதி வளர்சிதை மாற்றக் கோளாறுக்கான யோகா சிகிச்சை முறைகளை பார்த்தோம். இந்த வாரம் கீழ் முதுகு வலிக்கான யோகா சிகிச்சை முறைகளை பார்ப்போம்.
முதுகு, தலைவலிக்கு அடுத்தப்படியாக கீழ் முதுகில் அதிக வலி ஏற்படுகிறது. காரணம், இது உடலின் பெரும் பகுதி எடை மற்றும் அழுத்தத்தை தாங்குகிறது. மேலும், தவறான முறையில் அமர்வதும் இச்சிக்கலை அதிகரிக்கிறது.
நமது உடலில் ஏற்படும் கீழ் முதுகு வலிக்கா யோகா சிகிச்சை முறைகளை பார்ப்போம்.
சுய இழுவை:: தலையை ஒரு பாட்டிலின் மூடியை திருப்புவது போல் இரு பக்கமும் திருப்பவும். தலையை முதுகுத்தண்டை இழுப்பது போல் உடலை விட்டு மேலே இழுக்கவும். உடலை விட்டு விலகி கீழ் நோக்கி நடப்பது போல் குதிகால்களை நகர்த்தவும். இந்நிலையில் 30 விநாடிகள் இருக்கவும். பின்னர் விடுவித்து ஒரு நிமிடம் ஓய்வெடுக்கவும். காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும், இரவு படுக்கை அறைக்கு செல்வதற்கு முன்பு மூன்று முறை செய்யவும்.
தாலாசனம்:: சமஸ்திதி ஆசனத்தில் நிற்கவும், மூச்சை உள்ளிழுத்து, இரு கைகளின் விரல்களையும் ஒன்றுக்கொன்று இணையாகவும், இருக்கமாகவும் வைத்து உங்கள் தலைக்கு மேல் உயர்த்தவும். இரு கைகளின் உள்ளங்கைகளும் உள்நோக்கி இருக்கட்டும். பின்னர் கால் விரல்களால் மேல் நோக்கி எம்பி நிற்கவும்.
மூச்சைப் பிடித்து, உங்கள் முழு உடலிலும் கால் விரல்கள் முதல் கைவிரல் நுனி வரை ஏற்பட்டுள்ள ஆரோக்கியமான நீட்சியை உணருங்கள். மெதுவாக கைகளை பக்கவாட்டில் தளர்த்தவும். மூச்சை விட்டுக் கொண்டே கால்களை தரையில் பதிய வைத்து நிற்கவும். அதிகப்பட்ச நன்மை பெற ஒவ்வொரு அமர்விலும் இரு முறை பயிற்சியை மீண்டும் செய்யவும், பயிற்சி செய்ய, செய்ய இந்த நிலையில் 30 முதல் 45 வினாடி வரை இருக்க முடியும். அவ்வாறு இருக்கும் போது இயல்பாக மூச்சை விட வேண்டும்.
அர்த்தஷலபாசனம்:: உன்முகாசனத்தில் படுத்துக் கொண்டு, மூச்சை உள்ளிழுத்தபடி முட்டியை மடக்காமல், வலது காலை முடிந்த அளவிற்கு உயர்த்தவும். சில விநாடிகள் காலை நேராகவும், முடிந்தவரை உயரமாக பிடித்துக் கொள்ளவும். பக்கவாட்டில் சாயாக்கூடாது. பின்னர், மெதுவாக மூச்சை விட்டுக் கொண்டே காலை இறக்கி, முகம் தரையை பார்த்த நிலைக்கு வரவும். இதை மூன்று முறை செய்யவும். பின்னர், இடது பக்கம் இதேபோன்று செய்யவும்.
ஷலப ஆசனம்:: உன்முக ஆசனத்தில் படுத்துக் கொண்டு கைகளை மூடி இறுக்கி தொடையின் கீழ் வைக்கவும். மூச்சை இழுத்துக் கொண்டே இரு கால்களையும் ஒன்றாக இருப்பில் இருந்து மேலே உயர்த்தவும். சில விநாடிகள் கால்களை நேராகவும், முடிந்தவரை உயரமாக வைத்திருக்கவும். பின்னர் மூச்சை விட்டுக் கொண்டே கால்களை கீழே இறக்கவும். முகம் தரையை பார்த்தவாறு படுக்கவும்.
புஜங்காசனம்:: கைகளை பக்கவாட்டில் வைத்து உன்முகாசனத்தில் படுத்தக் கொள்ளவும். தலை முதல் கால்வரை ஒரே நேர்க்கோட்டில் வைக்கவும். இரு முழங்கைகளையும் வளைத்து, உள்ளங்கைகளை மார்பின் பக்கவாட்டு தரையில் வைத்து, தலைமை மெல்ல உயர்த்தவும். கைகள் முடிந்தவரை நேராக இருக்கும் வரையில் மார்பை உயர்த்த வேண்டும். தொப்புளை தரையில் இருந்த உயர்த்தக்கூடாது. இடுப்பு பகுதியில் ஏற்படும் வளைவை உணருங்கள். சில நொடிக்கு பிறகு மெதுவாக மார்பையும், தலையையும் கீழே கொண்டு வந்து முகத்தால் தரையை தொடவும். கைகளை விடுவித்து, உன்முக ஆசனத்தில் ஓய்வெடுக்கவும்.
வியாக்ரக பிராணாயாமம்:: சதுஸ்பாத ஆசனத்தில் உங்கள் எடையை, உங்கள் கைகள் மற்றும் கால் முட்டிகள் சமமாக தாங்குமாறு பார்த்துக் கொள்ளவும். மூச்சை உள்ளிழுத்தக் கொண்டே, தலையை மெதுவாக உயர்த்தி, முதுகை கீழே வளைக்கவும். பின்னர், மெதுவாக மூச்சை விட்டுக் கொண்டே முதுகை மேல்நோக்கி வளைத்து தலையை தாழ்த்தவும். இப்பயிற்சியை ஒவ்வொரு முறை செய்யும்போதும் குறைந்தது 9 முறை செய்ய வேண்டும்.
இனி செரிமான கோளாறுகளுக்கான யோகா சிகிச்சை முறையை அடுத்த வாரம் பார்ப்போம்....
பயன்கள்: அர்த்தஷலபாசனம் முழு பின்புற பகுதி தசைகளை உறுதியாக உதவுகிறது. மேலும், இடுப்பு மற்றும் கீழ் முதுகளில் உள்ள அதிகப்படியான கொழுப்பை மறுபகிர்வு செய்ய உதவுகிறது. ஷலபாசனம் வயிற்று உறுப்புகளுக்கு ஆரோக்கியமான அழுத்தத்தை தருகிறது. மேலும், வயிறு மற்றும் உடற்பகுதி தசைகளை ஆரோக்கியமான முறையில் திடப்படுத்துகிறது. புஜங்காசனம் கீழ் முதுகு மற்றும் பின்புற பகுதி தசைகளை திடப்படுத்துகிறது. மேலும், இடுப்பு மற்றும் கீழ் முதுகில் உள்ள அதிகப்படியான கொழுப்பை மறு பகிழ்வு செய்ய உதவுகிறது. வியாக்ரக பிராணாயாமம் நுரையீரலின் அனைத்து பகுதிகளையம் சீராக மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் பயன்படுத்த உதரவுகிறது. பெண்களுக்க மாதாவிடாய் பிரச்னை மற்றும் கர்ப்பப்பை இறக்கம் போன்ற பிரச்னைகளை தடுக்கவும், சரி செய்வதற்கு எளிய பயிற்சி ஆகும். மேலும், பிரசவத்திற்க பிந்தைய காலத்தில் புத்துணர்வு பெறவும் உதவுகிறது.
