/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு 'சீல்'
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு 'சீல்'
ADDED : ஏப் 20, 2024 05:51 AM

புதுச்சேரி : ஓட்டுப்பதிவு முடிந்தவுடன், சீல் வைக்கப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்பு டன் ஸ்ட்ராங் ரூமிற்கு கொண்டு செல்லப்பட்டது.
புதுச்சேரியில் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நேற்று காலை 7:00 மணிக்கு துவங்கி மாலை 6:00 மணி வரை நடந்து முடிந்தது. ஓட்டுப்பதிவுக்காக புதுச்சேரி முழுதும் மொத்தம் 618 இடங்களில், 967 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது.
இதில், 60 மையங்களில் பெண்களால் நிர்வகிக்கப்படும், பிங்க் ஓட்டுச்சாவடியாகவும், 30 மாதிரி ஓட்டுச்சாவடிகள், இளம் அரசு ஊழியர்கள் கொண்ட 11 யூத் ஓட்டுச்சாவடியும், 2 மாற்றுத்திறனாளி ஊழியர்கள் கொண்ட ஓட்டுச்சாவடியும், ஒரு தனித்துவ ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது.
டோக்கன் விநியோகம்
வெயில் காரணமாக மாலை 5:00 மணிக்கு பிறகு பல ஓட்டுச்சாவடிகளில் அதிக வாக்காளர் வந்தனர். மாலை 6:00 மணிக்கு ஓட்டுப்பதிவு முடியும் நேரம் என்பதால், அதற்கு முன்னதாக வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கி ஓட்டுப்பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
ஓட்டுப் பதிவுக்கு 967 கன்ட்ரோல் யூனிட், 1,934 ஓட்டுப்பதிவு இயந்திரம், 967 வி.வி.பாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது.
ஓட்டுப்பதிவு முடிந்தவுடன், அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டது.
ஓட்டுச்சாவடியில் இருந்து ஸ்ட்ராங்க் ரூமிற்கு ஓட்டுபெட்டிகள் கொண்டு செல்லும் பணி இரவு முழுதும் நடந்தது.
அதன்பின்பு, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன், லாஸ்பேட்டை அரசு பெண்கள் பொறியியல் கல்லுாரி மற்றும் மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில் உள்ள 2 ஸ்ட்ராங்க் ரூமில் தொகுதி வாரியாக பிரித்து வைக்கப்பட்டது.

