ADDED : ஏப் 04, 2024 01:06 AM

அ.தி.மு.க., அன்பழகன் 'திடுக்'
புதுச்சேரி: பா.ஜ., ஓட்டுக்கு ரூ. 500 கொடுத்து வருவதால், தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என அ.தி.மு.க., வலியுறுத்தி உள்ளது.
அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் கூறியதாவது;
தேர்தல் நடவடிக்கைகள்நேர்மையாக, வெளிப்படையாக, சமநிலையோடு நடக்கவில்லை. பா.ஜ., வேட்பாளரான உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திற்கு, அரசு இயந்திரங்கள்தேர்தல் சட்ட விதிகளுக்கு புறம்பாக துணை நிற்கின்றன.
அரசு ஊழியர்களை தன்வசப்படுத்தி கொண்டு, மூத்த குடிமக்கள் முகவரிகளை பெற்றுக் கொண்ட பா.ஜ.,வினர் ஒவ்வொரு ஓட்டுக்கும் ரூ. 500 கொடுத்து வருகின்றனர். தேர்தலில் கண்டெய்னர்கள் மூலம் பா.ஜ., வேட்பாளருக்கு பணம் வந்துள்ளது. அந்த பணம் முக்கிய நிர்வாகிகளிடம் பிரித்து கொடுக்கப்பட்டு, ஓவ்வொரு ஓட்டுக்கும் ரூ. 1,000 வழங்க உள்ளனர்.
அரசு நிர்வாகம் ஒருதலைபட்சமாக பா.ஜ., வேட்பாளருக்கு தேர்தல் பணி ஆற்றுவதால் நடைபெறும் தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும்.
முதல்வரும், பா.ஜ., வேட்பாளரும் தேர்தல் முடிந்தவுடன் ரேஷன் கடைகள் திறக்கப்படும், இலவச அரிசி போடப்படும் என்கின்றனர். ரேஷன் கடை திறப்பதும், இலவச அரிசி போடுவது மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதை மறைத்து பொய் பேசுவதை பா.ஜ., நிறுத்தி கொள்ள வேண்டும். 3 ஆண்டுகள் மாநில அரசால் செயல்படுத்தவே முடியாத எந்த ஒரு திட்டத்தையும், லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றால் செயல்படுத்துவோம் என கூறுவது, மக்களை ஏமாற்றும் செயல் என கூறினார்.

