/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
4 நாட்களில் தபால் ஓட்டுப் போட்டவர்கள் 2,016 பேர்: முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஆர்வம்
/
4 நாட்களில் தபால் ஓட்டுப் போட்டவர்கள் 2,016 பேர்: முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஆர்வம்
4 நாட்களில் தபால் ஓட்டுப் போட்டவர்கள் 2,016 பேர்: முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஆர்வம்
4 நாட்களில் தபால் ஓட்டுப் போட்டவர்கள் 2,016 பேர்: முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஆர்வம்
ADDED : ஏப் 06, 2024 05:26 AM
புதுச்சேரி: வீட்டில் இருந்தபடியே ஓட்டு போடும் சிறப்பு வசதியை பயன்படுத்தி முதியோர், மாற்றுதிறனாளிகள், அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவர்கள் ஆர்வமாக ஓட்டளித்து வருகின்றனர். இதுவரை 2,016 பேர் தபால் ஓட்டளித்து ஜனநாயக கடமை ஆற்றியுள்ளனர்.
புதுச்சேரி லோக்சபா தேர்தல் வரும் 19 ம்தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இரண்டு வாரமே உள்ள நிலையில், அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடந்த லோக்சபா தேர்தலில் புதுச்சேரியில் 81.19 ஓட்டு பதிவு சதவீதம் பதிவாகி இருந்தது. இந்த லோக்சபா தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவு இலக்கினை எட்ட தேர்தல் துறை முழு முயற்சியில் களம் இறங்கியுள்ளது.
மாநிலத்தில் மொத்தமுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை - 10,23,699 ஆக உயர்ந்துள்ளது.
இதில், 85 வயதிற்கு மேற்பட்டோர், ஊனத்தின் தன்மை 40 சதவீதத்திற்கு மேலுள்ள மாற்றுத் திறனாளிகள் மற்றும் அத்தியாவசியப் பணிகளில் உள்ள ஊழியர்கள் வீட்டிலிருந்தே ஓட்டளிப்பதற்கான உரிமையை இந்தியத் தேர்தல் ஆணையம் அளித்துள்ளது.
புதுச்சேரி, மாகி மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள இவர்களின் ஓட்டுகள் பெறும் பணி கடந்த 2ம் தேதி துவங்கியது. வீட்டில் இருந்தபடி ஓட்டுபோட விண்ணப்பித்த வாக்காளர்களுக்கு ஒவ்வொரு நாளும் மொபைல் பேசி மூலம் நினைவூட்டி, அவர்களது ஓட்டுகளை பெற தேர்தல் துறை சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. இதற்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த சிறப்பு வசதியை பயன்படுத்தி வீட்டில் இருந்தபடி ஓட்டளிக்க மொத்தம் 2,931 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
இவர்களின் கடந்த நான்கு நாட்களில் மட்டும் 2,106 பேர் ஓட்டளித்துள்ளனர்.அதாவது 71.85 சதவீத பேர் இந்த சிறப்பு ஓட்டுபோடும் வசதியை பயன்படுத்தி ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர்.
85 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களை பொருத்தவரை விண்ணப்பித்த 1,609 பேரில் 1,176 பேர் ஓட்டுப் போட்டுள்ளனர்.
பிராந்திய ரீதியாக புதுச்சேரியில்-835, காரைக்கால்-102, மாகி-150, ஏனாம்-89 பேர் ஓட்டுபோட்டுள்ளனர்.
மாற்றுதிறனாளிகளை பொருத்தவரை 1,322 பேர் ஓட்டளிக்க விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் புதுச்சேரி-603, காரைக்கால்-100, மாகி-106, ஏனாம்-121 பேர் என மொத்தம் 930 பேர் ஓட்டளித்துள்ளனர்.
அத்தியவசிய பணிகளில் ஈடுபவர்கள் புதுச்சேரி-20, காரைக்கால்-23 என மொத்தம் 43 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் புதுச்சேரி-19, காரைக்கால்-15 பேர் என மொத்தம் 34 பேர் ஓட்டளித்துள்ளனர்.
வீட்டில் இருந்தபடியே ஓட்டும்போடுவது இன்று 6ம் தேதியுடன் நிறைவுபெறுவதால், 100 சதவீத இலக்கினை எட்ட முழு வீச்சில் பணிகளை தேர்தல் துறை முடுக்கிவிட்டுள்ளது.

