ஆட்சியில் பங்கு கேட்டு தி.மு.க.,விடம் வலியுறுத்தி வருகிறோம்: செல்வப்பெருந்தகை
ஆட்சியில் பங்கு கேட்டு தி.மு.க.,விடம் வலியுறுத்தி வருகிறோம்: செல்வப்பெருந்தகை
ADDED : டிச 28, 2025 04:42 AM

சென்னை: “ஆட்சியில் காங்கிரசுக்கு பங்கு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை, தி.மு.க., தலைமையிடம் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் வலியுறுத்தி வருகிறார்,” என, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.
அவர் அளித்த பேட்டி:
பா.ஜ., ஆளும் மாநிலங்களில், சிறுபான்மையினர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
காங்கிரசுக்கு சிக்கல் இது, இந்திய இறையாண்மையின் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு சமம். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க, மத்திய அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்.
வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆனால், அதற்கு கூட பிரதமர் மோடி கண்டனம் தெரிவிக்கவில்லை.
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல், பிரியங்கா விரைவில் தமிழகம் வரவுள்ளனர்.
பல மாநிலங்களில், கடைசி நேரத்தில் தொகுதிகள் ஒதுக்கப்படுவதால், காங்கிரசுக்கு சிக்கல் ஏற்படுகிறது; கடைசியாக பீஹாரிலும் கூட அப்படித்தான் நடந்தது.
தி.மு.க., கூட்டணியில் இரண்டு மாதம் முன்பே, தொகுதி பங்கீடு குறித்து பேசி முடித்தால்தான், முன்கூட்டியே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடியும்.
அதை தான் தேர்தல் பொறுப்பாளர் என்ற முறையில், தி.மு.க.,விடம் கிரிஷ் ஷோடங்கர் பேசியிருக்கிறார்.
சொந்த கருத்து 'ஆட்சியில் பங்கு' உள்ளிட்ட விஷயங்களை, தி.மு.க.,விடம் பேசி முடிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் ஷோடங்கர் செயல்பட்டு வருகிறார்.
காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சு குழு தலைவராகவும் அவர் இருப்பதால், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
தமிழகத்தில், 'இண்டி' கூட்டணி வலிமையாக உள்ளது. காங்கிரஸ் பிரமுகர் திருச்சி வேலுசாமி த.வெ.க.,வுக்கு ஆதரவாக பேசியது, அவருடைய சொந்த கருத்து.
முதல்வர் ஸ்டாலின், 80 சதவீதம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார். மீதமுள்ள வாக்குறுதிகளை அவர் நிச்சயம் நிறைவேற்றுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.

