/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
த.வெ.க.,வில் இணைந்தார் செங்கோட்டையன்!
/
த.வெ.க.,வில் இணைந்தார் செங்கோட்டையன்!
UPDATED : நவ 27, 2025 10:16 AM
ADDED : நவ 27, 2025 12:59 AM

சென்னை: அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இன்று இணைந்தார்.
ஆலோசனை
அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்குமாறு குரல் கொடுத்து, காலக்கெடு விதித்தார், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். இதையடுத்து, அவரது கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன. அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர். இந்நிலையில், முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், தினகரன், சசிகலா ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்ததால், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கடும் கோபமடைந்து, கட்சியில் இருந்தே செங்கோட்டையனை நீக்கினார்.
இதையடுத்து, நேற்று காலை தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன், சென்னை போயஸ் கார்டனில் உள்ள த.வெ.க., தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா அலுவலகத்திற்கு சென்றார். அங்கு சில நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார்.
அதன்பிறகு, ஆதவ் அர்ஜுனா காரில் இருவரும் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள த.வெ.க., தலைவர் விஜய் வீட்டுக்கு சென்றனர். அங்கு விஜயுடன் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார்.
நிர்வாகிகள் பட்டியல் விஜயை சந்தித்தபோது, தன்னுடன் த.வெ.க.,வில் இணையவுள்ள அ.தி.மு.க., நிர்வாகிகள் பட்டியலையும், விஜயிடம் ஒப்படைத்தார். அவர்களுக்கும் விரைவில் பதவி வழங்குவதாக விஜய் உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில், சென்னை பனையூரில் உள்ள த.வெ.க., தலைமை அலுவலகத்தில், இன்று காலை 10:00 மணிக்கு, கட்சியின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.இந்த நிகழ்ச்சியில், செங்கோட்டையன் கலந்து கொண்டு, த.வெ.க.,வில் அதிகாரபூர்வமாக இணைந்தார்.

