பா.ஜ.,வுக்கு 25 தொகுதிகள், 10ல் வெற்றிக்கு உத்தரவாதம்; அமித் ஷாவிடம் பழனிசாமி உறுதி
பா.ஜ.,வுக்கு 25 தொகுதிகள், 10ல் வெற்றிக்கு உத்தரவாதம்; அமித் ஷாவிடம் பழனிசாமி உறுதி
ADDED : செப் 20, 2025 04:26 AM

சென்னை: டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, 'வரும் தமிழக சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வுக்கு, 25 தொகுதிகள் ஒதுக்கப்படும்; 10 தொகுதிகளில் உறுதியான வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்கிறோம்' என உறுதி அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
வரும் சட்டசபை தேர்தலில், அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு தொகுதி என, மொத்தம் 40 தொகுதிகளில் போட்டியிட பா.ஜ., விரும்புகிறது. இந்த சூழலில், டில்லியில் அமித் ஷாவை, சில தினங்களுக்கு முன்னர் பழனிசாமி சந்தித்து பேசினார்.
அப்போது, 'தி. மு.க., வை வீழ்த்து வதற்கு, அ.தி.மு.க., பலம் பெற வேண்டும்' என்ற கருத்தை அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மேலும், அமித் ஷா தரப்பில், 'தேர்தல் பணிகளில் 1 சதவீதம் கூட தொய்வு ஏற்படாமல் இருப்பதற்கு, கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டை இந்தாண்டு இறுதிக்குள் முடித்து, தேர்தல் பிரசார பணிகளில் வேட்பாளர்களையே களமிறக்க வேண்டும்' என, ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது.
அதற்கு பழனிசாமி தரப்பில், 'தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள், 200 தொகுதிகளில் வெற்றி பெறப் போவதாக பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன. தி.மு.க.,வை வீழ்த்த, அதிக தொகுதிகளில் அ.தி.மு.க., போட்டியிட வேண்டும்.
'எனவே, 175 - 200 தொகுதிகளில் அ.தி.மு.க., போட்டியிட வேண்டியுள்ளது. பா.ஜ.,வுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்படும்; அந்த தொகுதிகளின் செலவை அ.தி.மு.க., பார்த்துக் கொள்ளும். உறுதியாக 10 தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெற, அ.தி.மு.க., பாடுபடும்' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமித் ஷா தரப்பில், 'தமிழகத்தில் எங்களின் இலக்கு, 2029 லோக்சபா தேர்தல்; தி.மு.க., ஆட்சிக்கு வருவதை தடுக்க, பா.ஜ., அனைத்து வகையிலும் அ.தி.மு.க.,வுக்கு உறுதுணையாக இருக்கும்; புதிய கட்சிகளை சேர்ப்பது உள்ளிட்ட பணிகளில் அ.தி.மு.க., கவனம் செலுத்த வேண்டும்' என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.