தமிழக காங்கிரசில் உட்கட்சி மோதல்; தி.மு.க., -- த.வெ.க., அணிகள் உதயம்
தமிழக காங்கிரசில் உட்கட்சி மோதல்; தி.மு.க., -- த.வெ.க., அணிகள் உதயம்
ADDED : செப் 20, 2025 05:25 AM

'ஆட்சி பங்கு ஒப் பந்தத்திற்கு உடன்பாடு செய்யவில்லை என்றால், த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும்' என விஜய் ஆதரவு கோஷ்டியும், 'தி.மு.க.,வுடன் கூட்டணி நீடிக்க வேண்டும்' என தி.மு.க., ஆதரவு கோஷ்டியும் தமிழக காங்கிரசில் உருவாகி உள்ளது.
இரு தரப்பினரும் தங்கள் கருத்துகளை, பொது வெளியில் தெரிவித்து வருவது, கட்சியில் இரு தரப்பினருக்கும் இடையிலான மோதலாக உருவெடுத்துள்ளது.
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. இதை எதிர்கொள்ள, தமிழக காங்கிரசை வலுப்படுத்த, கிராம கமிட்டி, பூத் கமிட்டி அமைத்து, பொறுப்பாளர்களை நியமிக்கும் பணி நடந்து வருகிறது. 'கட்சி கட்டமைப்பை பலப்படுத்த, 125 தொகுதிகளை அடையாளம் கண்டு, கட்சி பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும்' என, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உத்தரவிட்டுள்ளார்.
தி.மு.க., கூட்டணியில் ஆட்சியில் பங்கு என்பதுடன், கூடுதல் தொகுதிகளை கேட்க வேண்டும் என, சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், முன்னாள் தலைவர் அழகிரி ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.
இவர்களை தொடர்ந்து, காங்கிரஸ் ஆதரவு ஆய்வுப்பிரிவு தலைவரும், ராகுலுக்கு நெருக்கமானவருமான பிரவின் சக்கரவர்த்தியும் கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டி:
திருநெல்வேலியில் ஓட்டு திருட்டை கண்டித்து நடந்த மாநாட்டில் பங்கேற்றேன். மாநாட்டில், 'தமிழக காங்கிரஸ் கட்சி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க வேண்டும்' என, சிலர் பேசினர். அப்படி கேட்டதில் எந்த தவறும் இல்லை.
திரும்ப திரும்ப லோக்சபா தேர்தலில் 10 தொகுதிகள், சட்டசபை தேர்தலில் 25 தொகுதிகள் பெற்று, எவ்வளவு நாளைக்கு கட்சி நடத்த முடியும்?
காங்கிரஸ் தொண்டர்கள், உள்ளாட்சி, சட்டசபை, லோக்சபா தேர்தலில் வாய்ப்பு கேட்பதில் தவறில்லை. காங்கிரஸ் கட்சிக்கு 5 - 6 சதவீத ஓட்டுகள் தான் உள்ளன என்ற பேச்சை விட்டுவிடுங்கள். தமிழகத்தில் காங்கிரஸ் தயவு இல்லாமல், யாரும் ஆட்சி அமைக்க முடியாது. எனவே, கூட்டணி ஆட்சிக்கு வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.
இப்படி, கூட்டணி ஆ ட்சிக்கு ஆதரவாக பலர் பேசி வரும் நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் சிலரும், கோஷ்டி தலைவர்கள் சிலரும், 'தி.மு.க., கூட்டணியில் கூடுதல் தொகுதிகள், ஆட்சியில் பங்கு தராவிட்டால், த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும்' என வலியுறுத்தி உள்ளனர்.
இதற்கு, தி.மு.க., ஆதரவு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், காங்கிரசில் விஜய் ஆதரவு, தி.மு.க., ஆதரவு என, இரு கோஷ்டிகள் உருவாகி உள்ளன. அதை வெளிப்படுத்தும் வகையில், கூட்டணி ஆட்சியை வலியுறுத்துவோரை கண்டித்து, செல்வப்பெருந்தகை ஆதரவாளர்கள் அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.
அதன் விபரம்:
தமிழக காங்கிரஸ் மூத்த துணைத் தலைவர் கே.விஜயன்: அழகிரி, ராஜேஷ்குமார் போன்றோர், பொது வெளியில் ஆட்சியில் பங்கு தேவை என்பதும், கூட்டணியில் அதிக இடங்கள் தேவை என்றும் கருத்து சொல்வது, செல்வப்பெருந்தகை தலைமையில் வேகமாக செயல்பட்டு வரும் காங்கிரஸ் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியாக உள்ளது. கூட்டணி முடிவு, எத்தனை இடங்கள் தேவை என்பதை முடிவு செய்கிற அதிகாரம் டில்லி தலைமைக்கு மட்டுமே உண்டு.
தமிழக காங்கிரஸ் பொதுச்செயலர் ரமேஷ் குமார்: காங்கிரஸ் சட்டசபை தலைவருக்கு என சில கடமைகளும், அதிகாரங்களும் வரையறுக்கப்பட்டுள்ளன. ராஜேஷ் குமார் தன் அதிகார எல்லையை மீறி, தனக்குள் இருக்கும் மாநிலத் தலைவர் ஆசையில் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார். தன் அதிகார எல்லையை மீறி தலையிடுவதை, இனி நிறுத்திக்கொள்ள வேண்டும். அதையும் மீறி செயல்பட்டால், சொந்த கட்சிக்குள் இருந்தே எதிர்ப்பு குரல்களை எதிர்கொ ள்ள வேண்டியதிருக்கும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
- நமது நிருபர் -