சேலம் ரயில் கோட்டம் துவங்கி 18 ஆண்டாகியும் ஆண்டுக்கு ஒரு ரயில் சேவை கூட துவக்கவில்லை
சேலம் ரயில் கோட்டம் துவங்கி 18 ஆண்டாகியும் ஆண்டுக்கு ஒரு ரயில் சேவை கூட துவக்கவில்லை
ADDED : அக் 23, 2025 06:16 AM

சேலம் ரயில்வே கோட்டம் துவங்கி, 18 ஆண்டுகளாகியும் இதுவரை சேலம் மக்களின் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. தலைமையிடமான சேலத்தில் இருந்து, ஆண்டுக்கு சராசரியாக ஒரு ரயில் சேவை கூட துவக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சேலம் ரயில்வே கோட்டம், 2007 நவ., 1ல் துவங்கப்பட்டது. ஆனால், 18 ஆண்டுகளாகியும் சேலம் மக்களின் கோரிக்கைகள், கானல் நீராக உள்ளது.
ரயில்வே கோட்டத்தின் தலைமை இடமாக உள்ள சேலத்திலிருந்து கிளம்பும் ரயில்களின் எண்ணிக்கை, பயணியர் ரயில்களையும் சேர்த்தால் கூட, 10ஐ கூட தொடவில்லை. சேலத்திலிருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் விரைவு ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை கிடப்பிலேயே உள்ளது.
தெற்கு ரயில்வேயில், அதிக வருவாய் ஈட்டக்கூடிய கோட்டங்களில், சேலம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண்டுக்கு சராசரியாக, 750 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டப்பட்டாலும், வளர்ச்சி திட்டங்கள், புது ரயில் திட்டங்கள் வழங்கப்படாமல் இருப்பது, சேலம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே ஆலோசனை குழு முன்னாள் உறுப்பினர் ஹரிஹரன் பாபு கூறியதாவது:
சேலத்தில் இருந்து தென் மாவட்டங்கள், வட கிழக்கு மாவட்டங்கள் ஆகியவற்றுக்கு கூடுதல் ரயில்களை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய ரயில்களை, சேலத்தில் இருந்து இயக்குவதற்கு, 'பிட் லைன்' எனப்படும் ரயில் பெட்டிகள் பராமரிப்பு மையம், இ.டி.ஆர்., எனும் ரயில் இன்ஜினை, ரயில் பெட்டிகளில் மாற்றி இணைக்கும் வசதி ஆகியவை உருவாக்கப்பட வேண்டும். இவை, ரயில்வே கோட்ட தலைமையிடத்தில் இருக்க வேண் டிய அத்தியாவசியமான தேவை. 18 ஆண்டுகளாகியும் அவை உருவாக்கப்படாமல் இருப்பது, தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் நடவடிக்கையில்லாததை காட்டுகிறது.
மேலும், சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில், பகல் முழுதும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும், சேலம்- - சென்னை எழும்பூர் விரைவு ரயிலை பராமரிப்பு செய்து, சேலம்- - கோவை அல்லது சேலம்- - திருச்சி என குறுகிய வழித்தடங்களில் இயக்கலாம். அயோத்தி யாபட்டணத்தில் இரண்டாவது ரயில் முனையம் ஏற்படுத்தினால், மேலும் பல்வேறு வசதிகள் உருவாகும். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது சிறப்பு நிருபர் --