UPDATED : செப் 17, 2025 12:00 AM
ADDED : செப் 17, 2025 08:28 AM
திருப்பூர்:
நஞ்சப்பா பள்ளியில் தேர்வு கட்டணம் என்கிற பெயரில் வசூல் வேட்டை நடத்துவதாக பெற்றோர், கலெக்டரிடம் புகார் அளித்துள்ளனர்.
திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி மாணவர்களின் பெற்றோர், நேற்றைய குறைகேட்பு கூட்டத்தில் அளித்த மனு: நஞ்சப்பா பள்ளியில், தேர்வு கட்டணம் என்கிற பெயரில், ஆறு முதல் பிளஸ்2 படிக்கும் ஒவ்வொரு மாணவர்களிடமும், 400 முதல் 500 ரூபாய் வரை வசூலிக்கின்றனர். பெற்றோர் நாங்கள், தினக்கூலிகளாக வேலை செய்கிறோம். இதனால், 500 ரூபாயை உடனடியாக எங்களால் கொடுக்க முடியாது. எங்கள் குழந்தைகளோ, 500 ரூபாய் கொடுத்தால்தான் பள்ளிக்கு செல்வோம் என அடம் பிடிக்கின்றனர்.
இதனால், குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். எவ்வித கல்வி கட்டணமும் இன்றி அரசு பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படுவதாலேயே எங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து படிக்கவைக்கிறோம். இந்நிலையில், தேர்வு கட்டணம் என்கிற பெயரில், மாணவர்களிடம் தொகை வசூலிப்பது வேதனை அளிக்கிறது. இத்தகைய வசூல் வேட்டை நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்; எங்கள் குழந்தைகளுக்கு தரமான கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறியுள்ளனர்.