மாணவர்கள் கவனத்தை சிதற விடாமல் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் பெங்களூரு இஸ்ரோ மைய விஞ்ஞானி அறிவுரை
மாணவர்கள் கவனத்தை சிதற விடாமல் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் பெங்களூரு இஸ்ரோ மைய விஞ்ஞானி அறிவுரை
UPDATED : ஏப் 09, 2025 12:00 AM
ADDED : ஏப் 09, 2025 11:41 AM

ஊட்டி:
மாணவர்கள் கவனத்தை சிதற விடாமல் சிறப்பாக செயல்பட்டால் நிச்சயமாக வெற்றி பெற முடியும் என இஸ்ரோ விஞ்ஞானி அறிவுறுத்தினார்.
ஊட்டி கிரசன்ட்கேசில் பள்ளியின் வெள்ளி விழா, அரசு பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடந்தது. பள்ளி தாளாளர் உமர்பரூக் தலைமை வகித்தார்.
அதில், பெங்களூரு விமான இயக்கவியல் குழு, யு.ஆர்.ராவ்., செயற்கை கோள் மைய (இஸ்ரோ) விஞ்ஞானி பிரபு பங்கேற்று, சாதித்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசியதாவது:
அறிவியல் துறையில் பல்வேறு வேலைவாய்ப்புகள், முன்னேற்ற மூலக்கூறுகள் உள்ளன. இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தற்போதைய சூழலில் மாணவ, மாணவியரின் கவனத்தை திசை திருப்ப பல சமூக வலைதளங்கள் உள்ளன. அதை தவிர்த்து, வாழ்வியலில் கவனம் செலுத்தும் போது நல்ல பலன் கிடைக்கும்.
பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு அறிவியல்; கணிதம் என, பல துறையிலும் வேலை வாய்ப்புகள் உள்ளன. தற்போது, தொழிற்நுட்ப வளர்ச்சி சிறப்பாக உள்ளது. இந்த சூழ்நிலையை மாணவர்கள் பயன்படுத்தி, கவனத்தை சிதற விடாமல் செயல்பட்டால் நிச்சயமாக எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.
நான் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து, தற்போது விஞ்ஞானியாக மாறியதற்கு கல்வியில் கவனம் செலுத்தியது முக்கிய காரணம். பள்ளி பருவத்தில் வெற்றிக்கான பாதையை தீர்மானியுங்கள். எதிர்காலம் சிறப்பாக மாறும். இவ்வாறு அவர் பேசினார். பள்ளி முதல்வர் ஆல்ட்ரிஜ் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

