ஆக 02, 2025 12:00 AM
ஆக 02, 2025 12:00 AM

மத்திய அரசின் நேஷனல் மீன்ஸ்-கம்-மெரிட் ஸ்காலர்ஷிப் - என்.எம்.எம்.எஸ்., திட்டத்தில் உதவித்தொகை பெற விரும்பும் தகுதியான பள்ளி மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
முக்கியத்துவம்:
பள்ளி இடைநிற்றலை தடுக்கவும், கல்வியைத் தொடர ஊக்குவிக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒன்பதாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அதிகபட்சமாக 4 ஆண்டுகளுக்கு என்.எம்.எம்.எஸ்., உதவித்தொகை வழங்கப்படுகிறது.
தகுதிகள்:
ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசு அல்லது அரசு உதவிபெறும் பள்ளியில், 8ம் வகுப்பில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது. பெற்றோரின் ஆண்டு வருமானம் மூன்றரை லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
அடுத்த கட்டமாக, 11ம் வகுப்பில் என்.எம்.எம்.எஸ்., உதவித்தொகையைத் தொடர பத்தாம் வகுப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுவதில்லை. இந்த உதவித்தொகை இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
உதவித்தொகை விபரம்:
9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை புதுப்பிக்கப்படும். இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் மொத்தம் 1 லட்சம் பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஒருவருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் ஆண்டுக்கு தலா ரூ.12 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகையைப் பெற மாணவர்கள் எழுத்துத் தேர்வில் பங்கேற்க வேண்டும். தேர்வை எழுத விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:
உதவித்தொகை குறித்த அறிவிப்பு, அதிகாரப்பூர்வ இணையதளமான https://scholarships.gov.in/ApplicationForm/login மற்றும் அந்தந்த மாநில அதிகாரப்பூர்வ இணையதளங்களிலும் வெளியிடப்படுகிறது. பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை:
'மென்டல் எபிலிட்டி டெஸ்ட் - எம்.ஏ.டி.,' மற்றும் 'ஸ்காலஸ்டிக் ஆப்டிட்யூட் தேர்வு - எஸ்.ஏ.டி.,' என இரண்டு தாள்கள் இடம்பெறும். ஒவ்வொரு தாளும் 90 மதிப்பெண்கள் கொண்ட வினாத்தாளாக இருக்கும். 7ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு கணிதம், சமூக அறிவியல், பொது அறிவியல் பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு தாளுக்கும் தேர்வு நேரம் 90 நிமிடங்கள். மொத்தம் 180 வினாக்களுக்கு 180 நிமிடங்கள் அளிக்கப்படுகின்றன. இரண்டு தேர்வுகளையும் சேர்த்து, குறைந்தது 40 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் குறைந்தது 32 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதும்.
விபரங்களுக்கு:
https://scholarships.gov.in/All-Scholarships