ஜூலை 23, 2020 12:00 AM
ஜூலை 23, 2020 12:00 AM
உலகம் முழுவதும் பெரும் சவாலாக மாறியிருக்கும் கொரோனா பாதிப்பால், மற்ற துறைகளைப் போலவே கல்வித்துறையும் பெரும் மாற்றங்களை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.
கொரோனா பாதிப்பால், பள்ளி, கல்லூரிகளின் கல்வி ஆண்டு, பருவத் தேர்வு தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் ஆகியோர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புக்கு தகுந்த முன்னேற்பாடுகளை கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள் தொடர் கற்றலில் ஏற்பட்டுள்ள இந்த இடைவெளி, உளவியல் ரீதியாக கல்விச்சூழலில் இருந்து அவர்கள் விலகி நிற்கும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.
இந்த நிலையை மிகக் கவனமாக கையாளவேண்டியது, நமது சமூகக் கடமைகளுள் ஒன்று. தற்காலத் தொழில்நுட்ப வளர்ச்சியின் பலனாக, 2020-2021ம் கல்வி ஆண்டுக்கான பாடங்களை இணையவழியாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. யு.ஜி.சி., பரிந்துரை அடிப்படையில் இணையவழிக் கற்றலில் பாடத்திட்டங்களை 40 சதவீதம் இ–கன்டென்ட் ஆக மாற்றம் செய்துள்ளோம். கற்பித்தல், கற்றல் மட்டுமின்றி தேர்வுகளையும் இணையவழியாக நடத்துவது குறித்தும் சிந்திக்கவேண்டியுள்ளது.
எங்களது கல்வி நிறுவனங்களில், சில ஆண்டுகளாகவே இணையவழி கற்பித்தலை தொடங்கி, அதில் சிறந்த பயிற்சியும், பயனையும் பெற்றுள்ளோம். கூகுள்மீட், கூகுள் கிளாஸ் ரூம் போன்ற கணினி செயலிகளை திறம்படக் கையாண்டு வருகிறோம். குறிப்பாக ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, கூகுள் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
கொரோனா என்பது, மனிதகுலம் இதுவரை சந்தித்திராத ஒரு பேரிடராக உள்ளது. இதை நாம் சவாலாக ஏற்று நமது கல்வி முறையிலும் மாற்றங்களை புகுத்த வேண்டிய நேரமிது. இருக்கும் தொழில்நுட்ப ஆதாரங்களைப் பயன்படுத்தி, மாணவர்களின் பலதரப்பட்ட சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, கல்விமுறையில் நல்ல மாற்றங்களை மிகக் கவனமாக மேற்கொள்ள வேண்டும். இந்த மாற்றத்தின் முயற்சியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு சிறப்பானதாக இருக்கும் என்பதை நம்பிக்கையுடனும், உறுதியுடனும் கூறமுடியும்.
- டி.லட்சுமி நாராயணஸ்வாமி, நிர்வாக அறங்காவலர், எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை.
