ADDED : டிச 29, 2024 05:21 AM
ராம்நகர்: ராம்நகரின் கனகபுரா டவுனை சேர்ந்தவர் ஷாலினி, 25. இவருக்கு கடந்த 10ம் தேதி ஒரு மொபைல் நம்பரில் இருந்து அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், 'வீட்டில் இருந்து பார்க்கும் வேலைக்காக இணையத்தில் பதிவு செய்து உள்ளீர்கள். எங்களிடம் வேலை உள்ளது. எங்கள் நிறுவனத்தில் இணைய தயாரா' என்று கேட்டு உள்ளார். இதற்கு ஷாலினி ஒப்புகொண்டார்.
பின், அவர் ஒரு வாட்ஸாப் குரூப்பில் இணைக்கப்பட்டார். தினமும் 1,000 ரூபாய் கட்டி வேலை செய்தால் 1,500 ரூபாய் கிடைக்கும் என்று, அந்த குரூப்பில் கூறப்பட்டு இருந்தது. அதன்படி தினமும் 1,000 ரூபாய் கட்டி 1,500 ரூபாய் சம்பாதித்து வந்தார்.
பணம் சரியாக வந்ததால் லட்சக்கணக்கில் முதலீடு செய்ய ஆசைப்பட்டார். நண்பர்கள், உறவினர்களிடம் கடன் வாங்கி 16.55 லட்சம் ரூபாய் கட்டினார்.
ஆனால் அவருக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை. திடீரென வாட்ஸாப் குரூப்பில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
தன்னிடம் பேசிய நபரின் மொபைல் எண்ணுக்கு அழைத்த போது, 'சுவிட்ச் ஆப்' என்று வந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.
ஷாலினி எப்படி மோசடி வலையில் சிக்கி பணம் இழந்தாரோ, அதேபோல சென்னப்பட்டணாவின் ஷாஹிதா பானு, 35 என்பவரும் 3.46 லட்சம் பணம் கட்டி ஏமாற்றம் அடைந்தார். இருவரும் ராம்நகர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்து உள்ளனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

