ADDED : ஆக 25, 2025 05:51 AM

திருச்சூர்: உலக ஐயப்பன் சங்கமம் மாநாடு பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பம்பையில் அடுத்த மாதம் நடக்கிறது.
திருவாங்கூர் தேவஸ்தானமும், கேரள அரசும் இணைந்து நடத்தும் இம்மாநாட்டில் பங்கேற்க வருமாறு, தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்த கேரள அமைச்சர் வாசவன் சமீபத்தில் அழைப்பு விடுத்தார்.
கேரள அரசின் இந்த செயலுக்கு கேரளா பா.ஜ., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதன் மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகர் வெளியிட்ட அறிக்கையில், 'சபரிமலை பாரம்பரியத்தையும், ஐயப்ப பக்தர்களையும் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவமதித்துள்ளார். ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதியும் ஹிந்துக்களையும், ஹிந்து மதத்தின் நம்பிக்கையையும் அவமதித்தவர்கள். இப்போது தேர்தலுக்காக ஐயப்பனைத் தேடி வருகின்றனர். இச்செயல் அனைத்தும் ஓட்டு வங்கிக்காகத்தான்.
காங்., -கம்யூ., மற்றும் தி.மு.க., போன்ற 'இண்டி' கூட்டணி கட்சிகள் சபரிமலை நிகழ்ச்சிக்கு செல்வது, 'ஹிட்லர் யூதர்களை கொண்டாடுவது' போன்றது. ஒசாமா பின் லேடன் சமாதான தூதராக மாறுவது போன்றது. இது தேர்தல் நேரத்தில், மக்களை முட்டாளாக்கும் செயல்; இனியும் மக்கள் ஏமாற மாட்டார்கள்' என, காட்டமாக தெரிவித்துள்ளார்.
தங்களின் எதிர்ப்பை மீறி தமிழக முதல்வர் ஸ்டாலின் உலக ஐயப்பன் சங்கமம் மாநாட்டில் பங்கேற்க வந்தால், புதிய வடிவிலான போராட்டத்தை முன்னெடுக்கவும் கேரளா பா.ஜ.,வினர் திட்டமிட்டுள்ளனர். அதனால், கேரளாவில் பரபரப்பு நிலவுகிறது.