சந்திரயான்-4, விண்வெளி நிலையம், வெள்ளி கிரகம் ஆய்வு; இஸ்ரோ கைவசம் அடுத்தடுத்து திட்டம்!
சந்திரயான்-4, விண்வெளி நிலையம், வெள்ளி கிரகம் ஆய்வு; இஸ்ரோ கைவசம் அடுத்தடுத்து திட்டம்!
UPDATED : ஆக 23, 2025 07:19 PM
ADDED : ஆக 23, 2025 05:57 PM

புதுடில்லி: 'நாங்கள் ஒரு சந்திரயான்-4 பணியை மேற்கொள்ளப் போகிறோம்' என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
டில்லியில் நடந்த தேசிய விண்வெளி தின விழாவில் நாராயணன் பேசியதாவது: நாங்கள் ஒரு சந்திரயான்-4 பணியை மேற்கொள்ளப் போகிறோம். வீனஸ் ஆர்பிட்டர் மிஷன் எனப்படும் வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்யும் பணியையும் தொடங்க உள்ளோம். 2035ம் ஆண்டுக்குள், இந்தியா விண்வெளி நிலையத்தை உருவாக்கும். இதற்கான முதல் கட்ட 2028ம் ஆண்டுக்குள் தொடங்கப்படும்.
வரும் 2040ம் ஆண்டுக்குள், இந்தியா சந்திரனில் தரையிறங்கி, மீண்டும் அங்கிருந்து பூமிக்கு பத்திரமாக திரும்பி வரும் வகையில் ராக்கெட் தொழில் நுட்பத்தில் முன்னேற்றம் அடைந்து விடும். அப்போது இந்தியாவின் விண்வெளித் திட்டம், உலகின் மற்ற எந்த நாட்டையும் விட உயர்ந்த இடத்தில் இருக்கும். ககன்யான் திட்டத்திற்கு முன்னதாக, யாரையாவது சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்ப வேண்டும் என்பது பிரதமர் மோடியின் யோசனையாக இருந்தது.
அவரது தொலைநோக்குப் பார்வை இன்று பெரும் வெற்றிக்கு வழிவகுத்தது. சுபான்ஷூ சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்துவிட்டு பாதுகாப்பாக பூமி திரும்பி உள்ளார். அவருடன் சென்ற மூன்று விண்வெளி வீரர்களை மறக்க முடியாது. 2040ம் ஆண்டுக்குள் உலகின் அனைத்து முக்கிய விண்வெளித் திட்டங்களுக்கும் இணையாக இந்தியா இருக்கும். இவ்வாறு நாராயணன் பேசினார்.