துணை ஜனாதிபதி தேர்தல்: சந்திரசேகர ராவ், நவீன் பட்நாயக் புறக்கணிப்பு
துணை ஜனாதிபதி தேர்தல்: சந்திரசேகர ராவ், நவீன் பட்நாயக் புறக்கணிப்பு
ADDED : செப் 08, 2025 05:44 PM

புதுடில்லி: நாளை (செப்., 09) நடைபெற உள்ள துணை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க போவதாக சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதீய ராஷ்ட்ரீய சமிதி மற்றும் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் கட்சிகள் அறிவித்துள்ளன.
ஜக்தீப் தன்கர் ராஜினாமா காரணமாக துணை ஜனாதிபதி தேர்தல் நாளை(செப்.,09) நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5:00 மணி வரை ஓட்டெடுப்பு நடக்கிறது. தேர்தல் முடிந்ததும் ஓட்டுகள் எண்ணப்பட உள்ளன. அதில், ஆளும் தேஜ கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்தவரும் மஹாராஷ்டிரா கவர்னருமான சி.பி.ராதாகிருஷ்ணனும், இண்டி கூட்டணி சார்பில் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகின்றனர். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
ஒடிசா
இந்நிலையில் இந்த தேர்தலை புறக்கணிக்க போவதாக ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் கட்சி அறிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சி மூத்த தலைவர் சஸ்மித் பத்ரா கூறுகையில், '' நவீன் பட்நாயக்குடன் ஆலோசித்த பிறகு, துணை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பது தேஜ கூட்டணி மற்றும் இண்டி கூட்டணியை சம தூரத்தில் வைத்து உள்ளோம். மாநிலத்தின் வளர்ச்சியில் மட்டும் கவனம் செலுத்தி வருவதாகவும்,'' தெரிவித்தார்.
இக்கட்சிக்கு லோக்சபாவில் எம்பிக்கள் யாரும் இல்லை. அதேநேரத்தில் ராஜ்யசபாவில் 7 எம்பிக்கள் உள்ளனர்.
தெலுங்கானா
தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலானபாரதீய ராஷ்ட்ரீய சமிதி கட்சியும் துணை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளது.
அக்கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமாராவ் கூறுகையில், '' மாநிலத்தில் உரத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. இதனை கண்டித்து துணை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க போகிறோம். இத்தேர்தலில் நோட்டா இருந்து இருந்தால், அதற்கு ஓட்டுப் போட்டு இருப்போம்'' எனத்தெரிவித்துள்ளார்.
இக்கட்சிக்கும் லோக்சபாவில் எம்பிக்கள் யாரும் இல்லை. ராஜ்யசபாவில் மட்டும் 4 எம்பிக்கள் உள்ளனர்.