இந்தியாவில் தேர்தல்கள் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடக்கின்றன: முன்னாள் தேர்தல் கமிஷனர்கள் உறுதி
இந்தியாவில் தேர்தல்கள் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடக்கின்றன: முன்னாள் தேர்தல் கமிஷனர்கள் உறுதி
UPDATED : செப் 08, 2025 07:03 PM
ADDED : செப் 08, 2025 06:25 PM

கோவை: '' இந்தியாவில் தேர்தல்கள் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடக்கின்றன,'' என முன்னாள் தேர்தல் கமிஷனர்கள் எஸ்ஓய் குரேஷி, ஓபி ராவத் மற்றும் அசோக் லவாசா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் லோக்சபா தேர்தல் மற்றும் மஹாராஷ்டிரா, ஹரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில் ஓட்டுகள் திருடப்பட்டதாக காங்கிரஸ் எம்பி ராகுல் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இதனை தேர்தல் கமிஷன் மறுத்தாலும் ராகுல் தனது குற்றச்சாட்டை தொடர்ந்து கூறி வருகிறார்.
இதனையடுத்து இது குறித்து பிரமாணப்பத்திரத்தில் ராகுல் கையெழுத்து போட வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். ஆனால், இதற்கு காங்கிரஸ் மறுப்பு தெரிவத்துள்ளது.
இதனிடையே கோவையில் நடந்த ' இந்தியா டுடே' விவாத நிகழ்ச்சியில் முன்னாள் தேர்தல் கமிஷனர்கள் எஸ்ஓய் குரேஷி, ஓபி ராவத் மற்றும் அசோக் லவாசா ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது 2018 முதல் 2020ம் ஆண்டு வரை தேர்தல் கமிஷனராக இருந்த அசோக் லவாசா கூறியதாவது: இந்தியாவில் தேர்தல்கள் நேர்மையாக நடக்கிறது என கருதுகிறேன். கடந்த கால வரலாறு இதனை நிரூபிக்கும். ஓட்டுத் திருட்டு என்பது தேர்தலுக்காக எழுப்பப்படும் கோஷம் ஆகும். யாருக்கு யார் ஓட்டுப் போட்டார்கள் என தெரியாத போது, இந்த குற்றச்சாட்டை எப்படி புரிந்து கொள்வது எனத் தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
ஓபி ராவத் கூறுகையில், '' அரசியல் மோதல்களைத் தவிர்ப்பதற்கு தேர்தல் என்பது பொதுவான வழி. தேர்தலின் போது எதுவும் நடக்காது. அனைத்தும் சுமூகமாக நடக்கும் என எதிர்பார்ப்பது அளவுக்கு மீறிய எதிர்பார்ப்பு ஆகும். இந்தியத் தேர்தல்கள் தங்கத்தின் தரம் போல் கருதப்படுகிறது. மிகவும், நேர்மையான , சுதந்திரமான மற்றும் நம்பகத்தன்மையான தேர்தல்கள் ஒன்றாக உலகின் பெரும்பான்மையான ஜனநாயகங்களால் பாராட்டப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இவர் 2015 முதல் 2018 வரை தேர்தல் கமிஷனராகவும், 2018 ஜன.,21 முதல் டிச., 1 வரை தலைமை தேர்தல் கமிஷனராகவும் பணியாற்றி உள்ளார்.
2010 முதல் 2012 ம் ஆண்டு வரை தலைமை தேர்தல் கமிஷனராக பணியாற்றிய எஸ்ஓய் குரேஷி கூறியதாவது: ஓட்டுத் திருட்டு என்பது அரசியல் கோஷமாக பார்க்கிறேன். நேர்மையான தேர்தல் நடத்த சுத்தமான வாக்காளர் பட்டியல் தேவை. அதேநேரத்தில் வாக்காளர் பட்டியல் குறித்த சந்தேகங்கள் நியாயமானவை. இந்தியாவின் தேர்தலுக்கும் மற்றும் அதன் ஒருமைப்பாட்டுக்கும் வாக்காளர் பட்டியல் தான் அடித்தளத்தை அமைக்கின்றன. வாக்காளர் பட்டியல் சுத்தமாக இருக்காத வரை, தேர்தல்களை நம்பகத்தன்மை வாய்ந்ததாக கருத முடியாது. 100 கோடி வாக்காளர்களை கருத்தில் கொண்டு, பெரும்பாலான விஷயங்கள் துல்லியமாக நடக்கின்றன. சில அரசியல் பிரச்னைகள் பெயரை கெடுக்கிறது. இதற்கு நாம் கவலைப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.