முதல் ஆளாக பிரதமர் மோடிக்கு வாழ்த்து சொன்ன அமெரிக்க அதிபர்
முதல் ஆளாக பிரதமர் மோடிக்கு வாழ்த்து சொன்ன அமெரிக்க அதிபர்
ADDED : செப் 18, 2025 12:10 AM

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல் ஆளாக தொலைபேசி வாயிலாக பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்த ஆதரவு அளிப்பதற்கு நன்றி கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று தன் 75வது பிறந்த நாளைக் கொண்டாடினார்.
இதையொட்டி நாடு முழுதும் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு பா.ஜ., ஏற்பாடு செய்திருந்தது. முக்கிய பிரமுகர்கள் பிரதமரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இதில், முதல் ஆளாக, நேற்று முன்தினம் இரவே பிரதமரை தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார், அமெரிக்க அதிபர் டிரம்ப்.
இது குறித்து தன் சமூக வலைதள பக்கத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள செய்தியில், 'என் நண்பர் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் உரையாடினேன். அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். பிரதமர் மோடி ஓர் மகத்தான பணியை செய்து வருகிறார்.
'ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதில், இந்தியா அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி' என, தெரிவித்துள்ளார்.
இதற்கு தன் சமூக வலைதள பக்கத்தில் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். அதில், 'என் பிறந்த நாளில் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்த நண்பரும், அமெரிக்க அதிபருமான டொனால்டு டிரம்புக்கு நன்றி.
'உங்களைப் போலவே இந்தியா - அமெரிக்கா இடையிலான விரிவான மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை புதிய உயரத்துக்கு எடுத்துச் செல்வதில் நானும் உறுதிபூண்டுள்ளேன்.
'ரஷ்யா - உக்ரைன் மோதலுக்கு அமைதியான முறையில் தீர்வு காண, அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சிகளை நாங்கள் ஆதரிக்கிறோம்' என, குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிபர் டிரம்ப், நம் நாட்டு பொருட்களுக்கு 50 சதவீதம் இறக்குமதி வரி விதித்தார்.
ரஷ்யா - உக்ரைன் போருக்கு மறைமுகமாக உதவும் வகையிலேயே, ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதாக டிரம்ப் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டினர்.
வரி விதிப்புக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.
அதேசமயம், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள், இந்தியாவிடம் நெருக்கம் காட்டின. இதையடுத்து, இந்தியா தொடர்பாக எது பேசினாலும், 'இந்தியாவுடன் நல்லுறவு உள்ளது; பிரதமர் மோடி என் நண்பர்' என்ற தொனியில் டிரம்ப் பேசி வருகிறார்.
'ரஷ்யா - உக்ரைன் போருக்கு, இந்தியா மறைமுக ஆதரவு அளிப்பதாக முன்பு கூறியிருந்த அவர், தற்போது, அந்த போரை நிறுத்த அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி, என 'கூறியுள்ளார்.