ADDED : செப் 18, 2025 12:07 AM

கட்சிரோலி:மஹாராஷ்டிராவின் கட்சிரோலியில் போலீசாருடன் நடந்த துப்பாக்கி சண்டையில், இரு பெண் நக்சல்கள் கொல்லப் பட்டனர்.
மஹா.,வில் உள்ள கட்சிரோலி மாவட்டத்தின் எடப்பள்ளி தாலுகாவில் உள்ள மோடாஸ்கே கிராமத்தையொட்டிய வனப்பகுதியில், கட்டா எனப்படும் உள்ளூர் நக்சல் அமைப்பினர் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நேற்று காலை அஹேரி பகுதிக்கு விரைந்து சென்ற கட்சிரோலியை சேர்ந்த சி - 60 எனப்படும் நக்சல் எதிர்ப்பு கமாண்டோ படையினர், மத்திய ரிசர்வ் போலீசார் ஆகியோர் இணைந்து வனப்பகுதியில் நக்சல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள் போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். போலீசாரும் பதிலடி கொடுத்தனர்.
இரு தரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இரு பெண் நக்சல்கள் பலியாகினர். அவர்களது உடல்களை போலீசார் மீட்டனர்.
மேலும் துப்பாக்கி சண்டை நடந்த இடத்தில் இருந்து நக்சல்கள் பயன்படுத்திய தானியங்கி ஏ.கே. - 47 துப்பாக்கி, அதி நவீன துப்பாக்கி, ஏராளமான வெடிமருந்துகள், நக்சல் புத்தகங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து நக்சல் தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.