உத்தரபிரதேசத்தில் தண்டவாளத்தை கடக்கும் போது விபரீதம்; ரயில் மோதி ஆறு பேர் பலியான சோகம்!
உத்தரபிரதேசத்தில் தண்டவாளத்தை கடக்கும் போது விபரீதம்; ரயில் மோதி ஆறு பேர் பலியான சோகம்!
UPDATED : நவ 05, 2025 04:27 PM
ADDED : நவ 05, 2025 04:18 PM

லக்னோ: உத்தரப்பிரதேசத்தின் மிர்சாபூரில் தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயில் மோதி 6 பேர் உயிரிழந்தனர்.
உத்தரபிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்தில் ரயில் தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயில் மோதி பயணிகள் 6 பேர் உயிரிழந்தனர். நேரில் பார்த்தவர்கள் அந்தக் காட்சியைக் கொடூரமானது என்றும், ரயில் மோதியதில் உடல்கள் சிதைந்தன என்றும் விவரித்தனர்.
கோமோ-பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸில் இருந்து இறங்கி, தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, மூன்றாவது நடைமேடை வழியாகச் செல்லும் கல்கா மெயில் மோதியது என்பது தெரியவந்தது. உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்து உள்ளார். மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யுமாறு உத்தரவிட்டார். மீட்புப் பணிகளுக்கு உதவுமாறு மாநிலப் பேரிடர் மீட்புப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினருக்கு உத்தரவிட்டார்.
நேற்று (நவம்பர் 4)
சத்தீஸ்கரின் கோர்பா மாவட்டத்தில் உள்ள கெவ்ராவில் இருந்து பிலாஸ்பூர் நோக்கி நேற்று மாலை பயணியர் ரயில் சென்றது. அந்த ரயில் கடோரா, பிலாஸ்பூர் இடையே சென்றபோது, அதே தண்டவாளத்தில் சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது.
இதைக் கண்டு ரயில் இன்ஜின் டிரைவர் பதற்றமடைந்து பிரேக் பிடிப்பதற்குள், பயணியர் ரயில், சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் ரயிலில் இருந்த பயணியர் அலறியடித்து இறங்கினர். இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

