ADDED : மார் 21, 2024 03:40 AM

தென்மாநிலங்களில் பா.ஜ., ஆட்சியைப் பிடித்த ஒரே மாநிலம் கர்நாடகா மட்டும் தான். இதற்கு முக்கிய காரணம் முன்னாள் முதல்வர் எடியூரப்பா. 30 ஆண்டுகளுக்கு முன்பு, சைக்கிளில் மாநிலம் முழுதும் சுற்றிவந்து, கட்சியை கட்டமைத்தார்.
அவரது சீரிய முயற்சியால், 2008 தேர்தலில் வெற்றி பெற்று, பா.ஜ., ஆட்சிக்கு வந்தது. எடியூரப்பா முதல்வர் ஆனார். மூன்று ஆண்டுகள் 67 நாட்கள் பதவியில் இருந்தார். நில முறைகேடு வழக்கில் சிக்கி, சிறைக்குச் சென்று முதல்வர் பதவியை இழந்தார்.
சிறையில் இருந்து வெளியே வந்ததும், 'பா.ஜ., தன்னை சரியாக நடத்தவில்லை' என, கர்நாடகா ஜனதா கட்சியை ஆரம்பித்தார். பா.ஜ.,வில் இருந்த ஆதரவாளர்கள் சிலரை தன்னுடன் அழைத்துச் சென்றார்.
கடந்த 2013 தேர்தலில் பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை. இதனால் 2014ல் தனது கட்சியை பா.ஜ.,வுடன் இணைத்தார். அதன்பின்னர் பா.ஜ., மாநிலத் தலைவர் ஆனார்.
அடுத்து நடந்த 2018 தேர்தலில் பா.ஜ., 105 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சிக்கு அமைக்க கூடுதலாக 8 எம்.எல்.ஏ.,க்கள் தேவைப்பட்டனர். ஆனால் பா.ஜ., ஆட்சிக்கு வருவதை தடுக்க, காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி வைத்து, ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தன.
குமாரசாமி முதல்வர் ஆனார். சரியாக 14 மாதங்கள் மட்டுமே ஆட்சி நீடித்தது. கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் 17 பேர், ராஜினாமாவால் அரசு கவிழ்ந்தது. ராஜினாமா செய்தவர்கள் பா.ஜ., சார்பில் போட்டியிட்டு வென்றனர். இதனால் பா.ஜ., ஆட்சிக்கு வந்தது.
பதவி இறக்கம்
எடியூரப்பா மீண்டும் முதல்வர் ஆனார். ஆனால் அவர் மீண்டும் முதல்வர் ஆனதை, கட்சியின் மூத்த தலைவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
பா.ஜ.,வில் 75 வயதுக்கு மேற்பட்டோருக்கு, எந்த பதவியும் கிடையாது என்பது எழுதப்படாத விதி. அந்த விதியையும் மீறி, எடியூரப்பா முதல்வர் ஆக்கப்பட்டார்.
ஆட்சியில் எடியூரப்பா மகன் விஜயேந்திரா தலையீடு இருப்பதாக, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் புகார் கூற துவங்கினர்.
எடியூரப்பாவின் ஆதரவு வளையத்தில் இருந்த எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால், எடியூரப்பாவுக்கு எதிராகத் திரும்பினார்.
'எடியூரப்பாவை பதவியில் இருந்து இறக்க வேண்டும்' என, பசனகவுடா பாட்டீல் எத்னால், அரவிந்த் பெல்லத், ரவி, யோகேஸ்வர் என, ஒரு பட்டாளமே, டில்லியில் முகாமிட்டது.
அப்போதைய பா.ஜ., மாநிலத் தலைவர் நளின்குமார் கட்டீல் உதவியுடன், காய் நகர்த்த ஆரம்பித்தனர். கட்சியின் தேசிய செயலர் சந்தோஷ் உதவியுடன், ஒரு வழியாக எடியூரப்பாவை, முதல்வர் பதவியில் இருந்து இறக்கிவிட்டனர். இவர்கள் அனைவரும் எடியூரப்பாவின் முதுகில் குத்தியவர்கள்.
அதன்பின்னர் பசவராஜ் பொம்மை முதல்வர் ஆனார்.
எதிர்கோஷ்டி
கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., 66 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. ஆட்சியை இழந்தது. மாநிலத் தலைவராக இருந்த, நளின்குமார் கட்டீல் மீது, அதிருப்தி அலை எழுந்தது. அவரை மாற்றக்கோரி, கட்சித் தொண்டர்கள் போர்க்கொடி துாக்கினர். ஆனால் யாரை தலைவராக நியமிப்பது என்று தெரியாமல், பா.ஜ., மேலிடம் திணறியது.
இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட எடியூரப்பா, கட்சி மேலிடத்திடம் நைசாக பேசி, மகன் விஜயேந்திராவுக்கு தலைவர் பதவி வாங்கிக் கொடுத்தார். இது எடியூரப்பாவின் எதிர்கோஷ்டிக்கு பிடிக்கவில்லை.
தந்தை, மகனை பகிரங்கமாக விமர்சித்தனர். ஆனால் அவர்கள் இருவரும் எதையும் கண்டுகொள்ளவில்லை.
லோக்சபா தேர்தலுக்காக பா.ஜ., வெளியிட்டு உள்ள, வேட்பாளர் பட்டியலில், எடியூரப்பாவின் எதிரணியை சேர்ந்த நளின்குமார் கட்டீல், ரவி உள்ளிட்டோருக்கு சீட் கிடைக்கவில்லை.
பிரச்னை வெடிக்கும்
தந்தையை பதவியில் இருந்து துாக்கி எறியக் காரணமானவர்களுக்கு, சீட் கிடைக்கவிடாமல் பழிதீர்த்து உள்ளார் விஜயேந்திரா. இதுபோல எடியூரப்பாவை அவ்வப்போது விமர்சித்து வந்த ஈஸ்வரப்பாவுக்கு, ஷாக் கொடுக்கும் வகையில், அவரது மகன் காந்தேஷுக்கும் சீட் கிடைக்காதபடி செய்து உள்ளனர்.
தாவணகெரே முன்னாள் எம்.எல்.ஏ., ரேணுகாச்சார்யா, மைசூரு பா.ஜ., எம்.பி., பிரதாப் சிம்ஹாவுக்கும் இதே நிலை தான்.
சீட் கிடைக்காதவர்கள் எடியூரப்பா, விஜயேந்திராவுக்கு எதிராக திரும்பி உள்ளனர். 'மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என்பதற்காக, எதுவும் பேசாமல் வாயை மூடிக் கொண்டு இருக்கிறோம்' என, அதிருப்தி தலைவர்கள் கூறி உள்ளனர்.
'தேர்தலில் முடிந்ததும் கர்நாடக பா.ஜ.,வில் பிரச்னை வெடிக்கும்' என, அரசியல் வல்லுனர்கள் கணிக்கின்றனர்
.
- நமது நிருபர் -

