காலத்தை கடத்துவதற்கு சுதாகர் எண்ணம் பா.ஜ., - எம்.எல்.ஏ., விஸ்வநாத் குற்றச்சாட்டு
காலத்தை கடத்துவதற்கு சுதாகர் எண்ணம் பா.ஜ., - எம்.எல்.ஏ., விஸ்வநாத் குற்றச்சாட்டு
ADDED : மார் 21, 2024 03:29 AM

“நான்கு ஆண்டுகள் காலத்தை கடத்துவதற்காக, லோக்சபா தேர்தலில் முன்னாள் அமைச்சர் சுதாகர் போட்டியிட நினைக்கிறார்,” என, பா.ஜ., - எம்.எல்.ஏ., விஸ்வநாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.
லோக்சபா தேர்தலில் சிக்கபல்லாப்பூர் தொகுதி, பா.ஜ., 'சீட்'டுக்கு, முன்னாள் அமைச்சர் சுதாகர், எலஹங்கா பா.ஜ., - எம்.எல்.ஏ., விஸ்வநாத் மகன் அலோக் ஆகிய இருவருக்கும் இடையில் பலத்த போட்டி எழுந்து உள்ளது.
எடியூரப்பாவின் ஆதரவு இருப்பதால், அலோக்கிற்கு சீட் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் விஸ்வநாத் டில்லியில் நேற்று அளித்த பேட்டி:
சிக்கபல்லாப்பூர் பா.ஜ., எம்.பி., பச்சேகவுடா, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த பின்னர், எனது மகன் அலோக்கை, சிக்கபல்லாப்பூர் தொகுதியில் போட்டியிட தயார் செய்யும்படி என்னிடம் கட்சித் தலைவர்கள் கூறினர். அதன்படி அவரை தேர்தலுக்கு தயார்படுத்தி உள்ளேன். ஆனால் இப்போது சுதாகர் வந்து சீட் கேட்கிறார்.
என்னிடம் அவர் பேசும்போது, 'சட்டசபை தேர்தலில் தோற்றுவிட்டேன். ஒரு ஆண்டாக எந்த பொறுப்பும் இன்றி இருக்கிறேன். இன்னும் 4 ஆண்டுகள், என்னால் காலத்தை கடத்த முடியாது. இதனால் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு, எம்.பி., ஆகிவிடுவேன்' என்றார்.
காலத்தை கடத்துவதற்காக அவருக்கு சீட் தர முடியாது. நான் டில்லி வந்து உள்ளேன். மேலிட தலைவர்களை சந்திக்கவில்லை. எடியூரப்பாவுடன் வந்து உள்ளேன்.
எனது மகன் அலோக் அமெரிக்காவில் படித்தவர். 50 நாடுகளின் நிர்வாகம் பற்றி ஆய்வு செய்தவர். அவர் எம்.பி., ஆனால் கட்சிக்கும், சமூகத்திற்கும் நல்லது. அவர் வெற்றி பெற்றால் அடுத்த 25 ஆண்டுகள், எம்.பி.,யாக இருப்பார். நாங்கள் ஏற்கனவே பிரசாரம் துவங்கிவிட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்- நமது நிருபர் -.

