பயிர்க்கழிவுகளை எரிக்கும் விவசாயிகளை கைது செய்யாதது ஏன்? சுப்ரீம் கோர்ட் கேள்வி
பயிர்க்கழிவுகளை எரிக்கும் விவசாயிகளை கைது செய்யாதது ஏன்? சுப்ரீம் கோர்ட் கேள்வி
UPDATED : செப் 17, 2025 05:42 PM
ADDED : செப் 17, 2025 05:35 PM

புதுடில்லி: '' பயிர்க்கழிவுகளை எரித்து சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு காரணமான விவசாயிகளை கைது செய்யாதது ஏன் ,'' என பஞ்சாப் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.
உபி, ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களில் உள்ள காலியிடங்களை நிரப்பாதது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது.
தலைமை நீதிபதி கவாய் மற்றும் நீதிபதி வினோத் சந்திரன் ஆகியோர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது கவாய் கூறியதாவது: காற்று மாசுபாட்டுக்கு காரணமான பயிர்க்கழிவுகளை எரித்து தவறு செய்யும் விவசாயிகளை கைது செய்யாதது ஏன் ?விவசாயிகள் சிறப்பானவர்கள். அவர்களால் தான் நாம் சாப்பிடுகிறோம். அதனால், சுற்றுச்சூழலை பாதுகாக்காமல் இருக்க முடியாது. அபராதம் விதிக்கும் விதிமுறைகளை கொண்டு வராதது ஏன்? சிலர் சிறைக் கம்பிகளுக்கு பின்னால் இருந்தால் தான், சரியான செய்தி சென்று சேரும். விவசாயிகளுக்கு அபராதம் விதிக்கும் விதிமுறையை கொண்டு வராதது ஏன்? சுற்றுச்சூழலை பாதுகாக்கும் எண்ணம் உண்மையில் இருந்தால் ஏன் ஓடி ஒளிகிறீர்கள். பயிர் கழிவுகளை உயிர் எரிபொருளாக பயன்படுத்தலாம் என்ற செய்திகளை படிக்கின்றேன். இதில் நீங்கள் முடிவு எடுக்காவிட்டால், நாங்கள் உத்தரவுகளை பிறப்பிப்போம். இவ்வாறு தலைமை நீதிபதி கூறினார்.