ADDED : டிச 20, 2024 11:01 PM

பெலகாவி: ''சுவர்ண விதான்சவுதாவில், குளிர்கால சட்டசபை கூட்டத்தொடர் 64 மணி நேரம் நடந்துள்ளது. பல மசோதாக்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டன,'' என, சபாநாயகர் காதர் தெரிவித்தார்.
பெலகாவியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
சுவர்ண விதான்சவுதாவில், டிசம்பர் 9ம் தேதி குளிர்கால சட்டசபை கூட்டத்தொடர் துவங்கியது. நேற்று (நேற்று முன் தினம்) முடிந்தது.
எட்டு நாட்களில், 64 மணி நேரம் கூட்டத்தொடர் நடந்தது. இம்முறை நடந்த கூட்டத்தொடரில், நிதி வினியோக மசோதா உட்பட, 16 மசோதாக்கள் தாக்கல் செய்து, விவாதங்கள் நடத்தி நிறைவேற்றப்பட்டன.
கர்நாடக சட்டசபை - 2024 திருத்த மசோதா, கர்நாடக பட்டணா மற்றும் ரூரல் திட்டம் - 2024 திருத்த மசோதாக்கள் திரும்பப் பெறப்பட்டன.
49 உறுப்பினர்கள்
சட்டசபையில் இந்திய கணக்கு தணிக்கையாளர் அளித்துள்ள எட்டு அறிக்கைகள், கர்நாடக சட்டசபை வெவ்வேறு நிலைக்குழுக்களின் ஏழு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. வட மாவட்டங்கள் வளர்ச்சி தொடர்பான விவாதங்களில், 49 உறுப்பினர்கள் பங்கேற்றனர். 13 மணி நேரம் 11 நிமிடங்கள் விவாதம் நடந்தது.
விதி 60ன் கீழ் அளிக்கப்பட்ட இரண்டு விஷயங்கள் மாற்றப்பட்டது உட்பட, நான்கு விஷயங்கள் விதி 69ன் கீழ் விவாதிக்கப்பட்டன. சபையில் 3,004 கேள்விகள் ஏற்கப்பட்டன.
இவற்றுக்கு சபையிலும், எழுத்து மூலமாகவும் பதிலளிக்கப்பட்டன. பூஜ்ய நேரத்தில் ஐந்து விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
சமீபத்தில் காலமானவர்களுக்கு, சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ஜனாதிபதி, கவர்னரிடம் ஒப்புதல் பெற்றபட்ட மசோதாக்கள் குறித்து, செயலரிடம் இருந்து அறிக்கை பெறப்பட்டது.
மாநிலத்தில் அதிக மழையால் ஏற்பட்ட நஷ்டங்கள் குறித்து, வருவாய்த்துறை அமைச்சர் அளித்த பதில்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. வருவாய்த்துறை அமைச்சரும், முதல்வரும் பதில் அளித்துள்ளனர். 2024 - 25ம் ஆண்டு துணை பட்ஜெட், மாநில நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து, அங்கீகாரம் பெறப்பட்டது.
சிறந்த எம்.எல்.ஏ.,
ராஜிவ்காந்தி மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக கமிட்டிக்கு, மூன்று உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம், சபாநாயகருக்கு அளிக்கப்பட்டது. சபையில் மூத்த உறுப்பினர் ஜெயசந்திராவுக்கு 'சிறந்த எம்.எல்.ஏ.,' என்ற விருது வழங்கப்பட்டது.
உலக செஸ் சாம்பியன் பட்டம் பெற்ற இந்தியாவின் குகேஷ் தொம்மராஜுவுக்கு, சட்டசபையில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

