மக்களுக்காக களத்தில் நின்றால் வரவேற்பு யதுவீர் வருகை குறித்து சிம்ஹா கருத்து
மக்களுக்காக களத்தில் நின்றால் வரவேற்பு யதுவீர் வருகை குறித்து சிம்ஹா கருத்து
ADDED : மார் 12, 2024 11:51 PM

மைசூரு : ''மக்களுக்காக களத்தில் நின்றால், மன்னர் குடும்பத்தின் யதுவீரை, மைசூரு தொகுதியில் போட்டியிட நான் வரவேற்கிறேன்,'' என்று, பா.ஜ., -எம்.பி., பிரதாப் சிம்ஹா கூறி உள்ளார்.
மைசூரு தொகுதியில் இருந்து இரண்டு முறை பா.ஜ., சார்பில் எம்.பி., ஆனவர் பிரதாப் சிம்ஹா. மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிட தயாராகி வந்தார். ஆனால் அவருக்கு 'சீட்' கிடைக்காது என்று சொல்லப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு முகநுால் நேரலையில் பிரதாப் சிம்ஹா பேசியதாவது:
மக்களே... உங்கள் மனதில் நான் என்ன சொல்ல போகிறேன் என்று, ஆர்வம் இருக்கலாம். பெரிய விஷயம் எதையும் சொல்லவில்லை. இன்னும் மூன்று, நான்கு நாட்களில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும். ஒரு வேளை எனக்கு 'சீட்' கிடைக்கா விட்டால், இன்னும் மூன்று, நான்கு நாட்கள் மட்டுமே எம்.பி., ஆக இருக்க முடியும். கடந்த 10 ஆண்டுகளாக எனக்கு ஆதரவு தந்தவர்கள், என்னை விமர்சித்தவர்களுக்கு நன்றி.
ரசிகர் பட்டாளம்
எனக்கு சீட் கிடைக்காது என்று, ஊடகங்களில் செய்தி வெளியான போது, எனக்கு ஆதரவாக நின்றவர்களுக்கு நன்றி. என்னை விமர்சித்தவர்கள் கூட பிரதாப் சிம்ஹாவுக்கு சீட் கிடைக்க வேண்டும் என்று கூறினர். அதை கேட்க, எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
கடந்த 10 ஆண்டுகள் எனது மனசாட்சிபடி வேலை செய்து உள்ளேன். இதனால் முழு திருப்தி அடைகிறேன்.
வரும் தேர்தலில் சீட் கிடைத்தால், இன்னும் அதிகமாக வேலை செய்வேன். காவிரி தாய், சாமுண்டீஸ்வரி ஆசி எனக்கு உள்ளது. மோடி, மீண்டும் நாட்டின் பிரதமர் ஆக வேண்டும். அதற்காக கடுமையாக உழைப்பேன். மோடிக்கு என்று ரசிகர் பட்டாளத்தை உருவாக்குவேன்.
இவ்வாறு அவர்பேசினார்.
அரசுக்கு எதிராக போராட்டம்
மைசூரில் நேற்று காலை பிரதாப் சிம்ஹா அளித்த பேட்டி:
மைசூரு தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக, மன்னர் குடும்பத்தின் யதுவீர் போட்டியிட உள்ளார் என்று, ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. அது உண்மையாக இருந்தால், யதுவீருக்கு எனது வரவேற்பு. அரண்மனையில் 'ஏசி' அறையில் ராஜாவாக இருக்காமல், மக்களுக்காக களத்தில் இறங்கினால், யதுவீரை வரவேற்காமல் இருக்க முடியுமா.
சித்தராமையா அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் அவரை வரவேற்பேன். அரண்மனை சொத்து தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் இடையில் தகராறு உள்ளது. பெரும்பாலான சொத்துகள், பொது பயன்பாட்டில் உள்ளது.
ஒருவேளை யதுவீர் எம்.பி., ஆனால், மக்கள் பிரதிநிதி என்ற முறையில், அரண்மனை சொத்துகளை, மக்களுக்கு கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
தப்பி ஓட மாட்டேன்
நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்யயவில்லை. கடந்த காலங்களில் பா.ஜ.,வில் இருந்து, வெற்றி பெற்றவர்கள் கட்சியை எப்படி கட்டமைத்தனர் என்று சொல்லுங்கள். தொண்டர்கள் தான் எனது பலம். யாரையும் புறக்கணிக்க மாட்டேன். சீட் கிடைக்கா விட்டாலும், சாதாரண தொண்டனாக பணியாற்ற தயார். ஒருபோதும் தப்பி ஓட மாட்டேன்.
கர்நாடகா பா.ஜ.,வில் 25 எம்.பி.,க்கள் உள்ளனர். பிரதமர் மோடியை சித்தராமையா விமர்சிக்கும் போது, அவருக்கு எதிராக பேசிய ஒரே நபர் நான் தான். கடந்த 10 ஆண்டுகளில் நான் செய்த வளர்ச்சி பணிகளை, எந்த எம்.பி.,யும் செய்தது இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
யதுவீரை கிண்டல் அடிக்கும் வகையில் பேசியதால், பிரதாப் சிம்ஹாவுக்கு பா.ஜ.,வில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

