வனத்துறை அதிகாரி வீட்டில் 'ரெய்டு' ரூ.1.5 கோடி, தங்க பிஸ்கட் பறிமுதல்
வனத்துறை அதிகாரி வீட்டில் 'ரெய்டு' ரூ.1.5 கோடி, தங்க பிஸ்கட் பறிமுதல்
ADDED : ஜூலை 26, 2025 04:03 AM

புவனேஸ்வர்: ஒடிஷா வனத்துறை துணை ரேஞ்சர் வீடு உள்ளிட்ட ஆறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 1.5 கோடி ரூபாய் ரொக்கம், நான்கு தங்க பிஸ்கட்கள் உள்ளிட்டவை பறி முதல் செய்யப்பட்டன.
ஒடிஷாவின் கோராபுட் மாவட்டம், ஜெய்ப்பூர் வனப்பகுதியில் துணை ரேஞ்சராக பணியாற்றுபவர் ராமசந்திர நேபக். இவர் மீது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து ஒடிஷா லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவருக்கு சொந்தமாக புவனேஸ்வர் மற்றும் ஜெய்ப்பூர் பகுதியில் உள்ள அவரது வீடு உட்பட ஆறு இடங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
ஜெய்ப்பூரில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டது. மேலும், அதே அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அவருக்கு சொந்தமான மற்றொரு வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதையடுத்து அங்கு கைப்பற்றப்பட்ட பணம், இயந்திரம் வாயிலாக எண்ணப்பட்டது. அதில் 1.44 கோடி ரூபாய் ரொக்கம் இருந்தது தெரியவந்தது. இதுதவிர நான்கு தங்க பிஸ்கட்கள், 10 கிராம் எடையுள்ள 16 தங்க காசுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்ந்து ஜெய்ப்பூரில் உள்ள அவரது அலுவலகம், மூதாதையர் வீடு, மாமியார் வீடு மற்றும் புவனேஸ்வரில் உள்ள சகோதரரின் அடுக்குமாடி வீட்டிலும் சோதனை நடத்தப்படுகிறது.
முன்னதாக கியோஞ்சார் பகுதியில் உள்ள கோட்ட வனத்துறை அதிகாரி நித்யானந்த நாயக் என்பவருக்கு சொந்தமான ஏழு இடங்களில், லஞ்ச ஒழிப்புதுறையினர் கடந்த வாரம் அதிரடி சோதனை நடத்தினர்.
அதில், அவரது பெயரில் 115 நிலங்களின் ஆவணங்கள், 200 கிராம் தங்கம், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பிற சொத்துக்கள் கண்டறியப்பட்டன.

