பிரதமர் மோடி, தாயார் ஏஐ வீடியோக்களை நீக்குங்கள்: காங்கிரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
பிரதமர் மோடி, தாயார் ஏஐ வீடியோக்களை நீக்குங்கள்: காங்கிரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
ADDED : செப் 17, 2025 12:51 PM

பாட்னா: பிரதமர் மோடி, அவரின் தாயார் ஆகியோரின் ஏஐ வீடியோக்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்குமாறு காங்கிரசுக்கு பாட்னா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பீஹாரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அதற்கான தேதிகள் அறிவிக்கப்படாவிட்டாலும், தேர்தலுக்கான பணிகளை தேர்தல் கமிஷன் ஏற்கனவே தொடங்கி விட்டது. அரசியல் கட்சிகளும் அணிகளை கட்டமைத்து பல கட்ட பிரசாரங்களையும் தொடங்கி உள்ளன.
குறிப்பாக பீஹார் காங்கிரஸ் கட்சியானது ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு வீடியோ ஒன்றை செப்.10ம் தேதி வெளியிட்டு இருந்தது. அதில் பிரதமர் மோடி போன்ற தோற்றம் கொண்ட ஒருவர் பேசிவிட்டு உறங்கும்போது கனவில் அவரின் தாயார் உருவத்தில் தோன்றும் ஒருவர் பேசுவதாகவும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன. அவர் பீஹார் அரசியல் குறித்து விமர்சிப்பதாகவும் காட்சிகள் வைக்கப்பட்டு இருந்தன.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாக கண்டனங்கள் எழுந்தன. ஏராளமான விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டன. இதையடுத்து, பாஜ தேர்தல் பிரிவைச் சேர்ந்த சங்கேத் குப்தா என்பவர் வழக்கு தொடர்ந்தார். முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு பாட்னா ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி (பொறுப்பு) பஜான்த்ரி, சமூக வலைதளங்களில் காணப்படும் அந்த வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும் என்று காங்கிரசுக்கு உத்தரவிட்டார்.