கோவில் நிதி பயன்பாடு திருத்த மசோதாவை ஏற்க மறுப்பு!: விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பினார் கவர்னர்
கோவில் நிதி பயன்பாடு திருத்த மசோதாவை ஏற்க மறுப்பு!: விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பினார் கவர்னர்
ADDED : மார் 21, 2024 03:19 AM

பெங்களூரு: கர்நாடக சட்டசபையில் ஒப்புதல் பெறப்பட்ட 'ஏ' பிரிவு கோவில்களில் வசூலாகும் பணம், வருமானம் இல்லாத 'சி' பிரிவு கோவில்களுக்கு கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்ற திருத்த மசோதாவை, கவர்னர் தாவர்சந்த் கெலாட் திருப்பி அனுப்பினார்.
கர்நாடக சட்டசபையின் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், 'கர்நாடக ஹிந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலைய அறக்கட்டளை திருத்த மசோதா' தாக்கல் செய்யப்பட்டது.
அதில் உள்ள அம்சங்கள் வருமாறு:
ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ள கோவில்களின் உண்டியலில் இருந்து ஆண்டுக்கு 10 சதவீதமும்; 10 லட்சம் ரூபாய் முதல் 1 கோடி ரூபாய் வரை வருமானம் உள்ள கோவில்கள் ஆண்டுக்கு 5 சதவீதமும், ஹிந்து அறநிலைய துறையில் உள்ள 'பொது சேமிப்பு நிதி'க்கு செலுத்த வேண்டும்.
அவ்வாறு சேகரிக்கப்படும் நிதி, அறநிலைய துறைக்கு உட்பட்ட வருமானம் இல்லாத 'சி' பிரிவு கோவில்களுக்கு பயன்படுத்தப்படும்.
அத்துடன் கோவில் நிர்வாக குழுவில் நான்கு சாதாரண உறுப்பினர்களில், விஸ்வகர்மா சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் அனுமதிக்கப்படுகிறார். அறநிலைய துறைக்குச் சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பணிக்குழு அமைக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு அம்சங்கள் உள்ளன.
இதற்கு பா.ஜ., - ம.ஜ.த., கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன. சட்டசபையில் ஒப்புதல் பெறப்பட்ட இம்மசோதாவுக்கு, மேல்சபையில் ஒப்புதல் கிடைக்கவில்லை. பின், இரண்டாவது முறையாக மீண்டும் தாக்கல் செய்யப்பட்டபோது, ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த மசோதாவை கவர்னரின் ஒப்புதலுக்கு அரசு அனுப்பியது. ஆனால், இதை ரத்து செய்யும்படி, கவர்னரிடம் கர்நாடக கோவில்களின் மஹா சங்கத்தினர் முறையிட்டனர்.திருத்த மசோதாவை பரிசீலித்த கவர்னர், மசோதாவை அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.
அத்துடன் அவர் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
உயர் நீதிமன்றத்தின் தார்வாட் கிளை, ஏற்கனவே கர்நாடக ஹிந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலைய அறக்கட்டளை சட்டம் 1997 மற்றும் அதன் திருத்தங்களுக்கு எதிரான ரிட் மனுவை, தள்ளுபடி செய்துள்ளது.
உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை மாநில அரசு அணுகி உள்ளது. உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உள்ள நிலையில் இறுதி விசாரணை நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், திருத்தம் செய்யலாமா என்பது குறித்து மேலும் விளக்கம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

