ராகுலின் எதிர்மறை சிந்தனை தவறு என நிரூபணம்; அமைச்சர் பியூஷ் கோயல்
ராகுலின் எதிர்மறை சிந்தனை தவறு என நிரூபணம்; அமைச்சர் பியூஷ் கோயல்
ADDED : ஆக 31, 2025 07:05 PM

புதுடில்லி: 'இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டது என ராகுல் சொல்கிறார். ராகுலின் எதிர்மறை சிந்தனை தவறு என்பதை இந்தியா நிரூபித்துள்ளது' என மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
இது குறித்து, பியூஷ் கோயல் கூறியதாவது: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தியா குறித்து ராகுல் போன்ற தலைவர்களின் எதிர்மறை சிந்தனை தவறு என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது என்று நான் நினைக்கிறேன்.
இந்தியாவின் பொருளாதாரம் ஒரு இறந்த பொருளாதாரம் என ராகுல் கூறுகிறார். கடின உழைப்பாளிகளான 140 கோடி இந்தியர்கள் இந்திய பொருளாதார வேகமாக வளர்ந்து வருகிறது என்பதை உலகிற்கு மீண்டும் ஒருமுறை காட்டியுள்ளனர். இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
தற்போது இந்தியாவுக்கு என்ன ஆற்றல் உள்ளது. பொருளாதாரம் எவ்வளவு வலிமையானது. இந்தியா எவ்வளவு வேகமாக முன்னேறி வருகிறது என்பது தெளிவாகி உள்ளது. வறுமையை ஒழிக்கும் பணிகள் இந்தியாவில் எவ்வாறு வெற்றிகரமாக செய்யப்படுகின்றன.
வரும் ஆண்டுகளில், குறிப்பாக 2027ம் ஆண்டிற்குள் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும். 2047ம் ஆண்டிற்குள் தன்னம்பிக்கை கொண்ட வளர்ச்சி அடைந்த நாடாக மாறும். பிரதமரின் தொலைநோக்கு சிந்தனைப்படி, 2047ம் ஆண்டிற்குள் அவரது தீர்மானத்தை நிறைவேற்றுவோம்.
2036ம் ஆண்டில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாடுகளும் முழு வீச்சில் தொடங்கியுள்ளன. இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா தலைமையில் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவதற்கும் நல்ல சூழல் நிலவுகிறது. இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார்.