அமெரிக்காவுக்கு அனைத்து வகை தபால் சேவைகளும் நிறுத்தம்!
அமெரிக்காவுக்கு அனைத்து வகை தபால் சேவைகளும் நிறுத்தம்!
ADDED : ஆக 31, 2025 07:35 PM

புதுடில்லி: மறு அறிவிப்பு வரும் வரை அமெரிக்காவுக்கான அனைத்து வகை தபால் சேவைகளும் முற்றிலும் நிறுத்தப்படுவதாக இந்திய தபால் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 50 சதவீதம் வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்து, தற்போது அதை நடைமுறைபடுத்தி உள்ளார். வரி விதிப்பால் இந்திய தொழில்துறைக்கு பெரும் பின்னடைவு என்றும், நாட்டின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந் நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை அமெரிக்காவுக்கான அனைத்து வகை தபால் சேவைகளும் முற்றிலும் நிறுத்தப்படுவதாக இந்திய தபால் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தமது எக்ஸ்வலை தள பக்கத்தில் ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது;
ஆக.22ம் தேதி 2025ம் ஆண்டு வெளியிட்ட அறிவிப்பில், 100 அமெரிக்க டாலர் வரையுள்ள பொருட்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு அவை மட்டும் தபால் மூலமாக அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதை தபால் துறை மறுபரிசீலனை செய்துள்ளது.
அமெரிக்காவுக்கு செல்லும் தபால்களை தொடர்ந்து கொண்டு செல்ல முடியாத நிலை, வரையறுக்கப்பட்ட ஒழுங்குமுறை வழிமுறைகள் இல்லாத நிலை உள்ளது. எனவே அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் கடிதங்கள், ஆவணங்கள் மற்றும் 100 அமெரிக்க டாலர் வரை மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் உள்பட அனைத்து வகை தபால்களின் முன்பதிவையும் முற்றிலும் நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ஏற்கனவே முன்பதிவு செய்துள்ள தபால்கள் அனுப்ப முடியாத சூழல் உள்ளதால் வாடிக்கையாளர்கள் செலுத்திய தபால் கட்டணத்தை திரும்ப பெறலாம்.
இவ்வாறு அந்த பதிவில் இந்திய தபால் துறை குறிப்பிட்டுள்ளது.