ADDED : மார் 21, 2024 04:03 PM
'இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்ற கருத்தியல் பொய்யாக்கப்பட்டுள்ளது. நாட்டில் 20 சதவீத வாக்குகள் எங்களுக்கு இருந்தாலும் 2 ரூபாய் கூட கொடுக்க முடியாமல் வங்கிக் கணக்கை முடக்கியுள்ளனர்' என, காங்கிரஸ் எம்.பி., ராகுல் தெரிவித்தார்.
டில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா, ராகுல்காந்தி ஆகியோர் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:
உலகமே, இந்தியாவை அறிவதற்கு காரணம் அதன் ஜனநாயக விழுமியங்கள் தான். ஜனநாயக அமைப்பில் அனைத்துக் கட்சிகளுக்கும் சமமான வாய்ப்புகளுடன் வெளிப்படையான தேர்தல் நடத்தப்படுவது அவசியம்.
அனைத்து அரசியல் கட்சிகளும் சமநிலையில் போட்டியிடும் வகையில் வாய்ப்பு இருக்க வேண்டும். மத்திய விசாரணை அமைப்புகளை ஒரு கட்சி மூலம் கட்டுப்படுத்தக் கூடாது. தேர்தலில் சமபலத்துடன் களமிறங்குவதற்கு நிதி அவசியம்.
தேர்தல் பத்திரங்களில் நடந்த முறைகேட்டால் சர்வதேச அளவில் இந்தியாவின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் பத்திரங்களின் மூலம் 56 சதவீத நிதியை பா.ஜ., பெற்றுள்ளது. காங்கிரசுக்கு 11 சதவீத நிதி தான் கிடைத்துள்ளது. வருமான வரித்துறை, சி.பி.ஐ, அமலாக்கத்துறை ஆகியவற்றை பா.ஜ., தவறாக பயன்படுத்துகிறது.
தேர்தல் நேரத்தில் காங்கிரசின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அவற்றை பயன்படுத்திக் கொள்ள அனுமதி கிடைக்கவில்லை. வங்கிக் கணக்குகளை உள்நோக்கத்துடன் முடக்கி உள்ளனர்.
இவ்வாறு கார்கே கூறினார்.
கிரிமினல் தாக்குதல்
அடுத்து, ராகுல் எம்.பி., பேசுகையில், 'காங்கிரசின் மீது பிரதமர் மோடியும் அமைச்சர் அமித்ஷாவும் கிரிமினல் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்ற கருத்தியல் பொய்யாக்கப்பட்டுள்ளது. நாட்டில் 20 சதவீத வாக்குகள் எங்களுக்கு இருந்தாலும் 2 ரூபாய் கூட கொடுக்க முடியாமல் வங்கிக் கணக்கை முடக்கியுள்ளனர்.
14 லட்ச ரூபாய் வருமான வரி பிரச்னைக்காக காங்கிரசின் ஒட்டுமொத்த நிதியும் முடக்கப்பட்டுள்ளது. இது 30 ஆண்டுகளுக்கு முந்தைய பிரச்னை. தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன்னர் வங்கிக் கணக்கை முடக்கியது என்பது திட்டமிட்ட செயல்.
இதன்பேரில் தேர்தல் ஆணையமோ நீதிமன்றமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்திய ஜனநாயக அமைப்புகளை பா.ஜ., மொத்தமாக அழித்துவிட்டது' என்றார்.
பிரதமரின் சதி
முன்னதாக, சோனியா காந்தி பேசுகையில், 'இது மிக தீவிரமான விஷயம். இது இந்திய தேசிய காங்கிரசுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை. நாட்டின் ஜனநாயகத்தை பெரிதும் பாதிக்கும். காங்கிரசை முடக்குவதற்கு திட்டமிட்ட சதிகளை பிரதமர் மோடி முன்னெடுக்கிறார்.
காங்கிரசின் வங்கிக் கணக்கில் இருந்து வலுக்கட்டாயமாக பணம் எடுக்கப்படுகிறது. இப்படியொரு சிக்கலான நிலையில், முடிந்த அளவுக்கு தேர்தல் பிரசாரத்தை முன்னெடுப்போம்' என்றார்.

