ஆன்லைன் விளம்பரம் செய்ய கட்சிகள் செலவு ரூ.103 கோடி
ஆன்லைன் விளம்பரம் செய்ய கட்சிகள் செலவு ரூ.103 கோடி
ADDED : மார் 12, 2024 11:47 PM
புதுடில்லி:வரும் லோக்சபா தேர்தலை முன்னிட்டு, கடந்த மூன்று மாதங்களில் மட்டும், ஆன்லைன் விளம்பரங்களுக்காக, அரசியல் கட்சிகளும், தனியார் அமைப்புகளும், 102.70 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளதாக, மெட்டா மற்றும் கூகுள் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதில், இணைய விளம்பரங்களுக்கு அதிகபட்சமாக, பா.ஜ., 37 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. காங்கிரஸ் கட்சியோ வெறும், 12.20 லட்சம் ரூபாய் மட்டுமே செலவிட்டுள்ளது.
காங்கிரசை விட, 300 மடங்கு அதிகமாக, பா.ஜ., செலவிட்டுள்ளது. காங்கிரஸ் செலவிட்ட, 12.20 லட்சம் ரூபாயிலும், ராகுல் மேற்கொண்டுள்ள, 'பாரத் ஜோடோ நியாய்' யாத்திரை பற்றி பேசும் பேஸ்புக் பதிவுகளை பிரபலப்படுத்த மட்டும், 5.7 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது.
ஆன்லைன் விளம்பரங்களுக்காக, பா.ஜ.,வுக்கு அடுத்ததாக, ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சி, 4 கோடி ரூபாயும், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின், பிஜு ஜனதா தளம், 51 லட்சம் ரூபாயும், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, 39.50 லட்சம் ரூபாயும், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, 27 லட்சம் ரூபாயும் செலவிட்டுள்ளன.
உ.பி., மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி, பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, சிவசேனா உள்ளிட்ட மாநில கட்சிகள் எதுவும், எந்த விதமான ஆன்லைன் விளம்பரங்களையும் செய்யவில்லை.
பா.ஜ.வுக்கு அடுத்து இணையத்தில் அதிகபட்ச புகழோடு இருக்கும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி, இதுவரை எந்தச் செலவும் செய்யவில்லை.
இந்த விளம்பர செலவுகளை அரசியல் கட்சிகள் மட்டும் நேரடியாக செய்யவில்லை. பல பெயர்களில் இயங்கும் தனியார் அமைப்புகளும், இந்த விளம்பரச் செலவை செய்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை, அரசியல் கட்சிகளின் பினாமி நிறுவனங்களே என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

