பார்லியில் அமளி நீடித்தால் விவாதமின்றி மசோதாக்கள் நிறைவேற்றுவோம்: கிரண் ரிஜிஜூ
பார்லியில் அமளி நீடித்தால் விவாதமின்றி மசோதாக்கள் நிறைவேற்றுவோம்: கிரண் ரிஜிஜூ
ADDED : ஆக 05, 2025 09:13 AM

புதுடில்லி: ''பார்லியில் தொடர்ந்து அமளி நீடித்தால் விவாதமின்றி மசோதாக்கள் நிறைவேற்றப்படும்'' என பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
பார்லி மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பார்லிமென்ட் அலுவல்கள் தொடர்ந்து செயல்படாமல் இருந்து வருகிறது. குறிப்பாக, பீஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிர்க்கட்சியினர் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.
எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்த நிலையில், விளையாட்டு தொடர்பான இரண்டு முக்கிய முன்மொழியப்பட்ட சட்டங்களை லோக்சபா ஏற்க மறுப்பு தெரிவித்தது. இதனால் கடும் கோபம் அடைந்த கிரண் ரிஜிஜூ, '' பார்லியில் தொடர்ந்து அமளி நீடித்தால் விவாதமின்றி மசோதாக்கள் நிறைவேற்றப்படும்'' என எச்சரித்தார்.
மேலும் அவர் கூறியதாவது: தேசிய நலனுக்காக மசோதாக்களை நிறைவேற்ற அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். எதிர்க்கட்சி எம்பிக்கள் தடுத்து நிறுத்தி வருகின்றனர். விளையாட்டு தொடர்பான 2 மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.
2036ம் ஆண்டு கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கான இந்தியாவின் முயற்சியைக் கருத்தில் கொண்டு இவை முக்கியமானவை. 3வது வாரமாக அலுவல்கள் பாதிக்கப்பட்டு வருகிறது.
பீஹாரின் வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தம் குறித்த விவாதங்களை பார்லியில் நடத்த முடியாது. ஏனெனில் இந்த நடைமுறை தேர்தல் கமிஷனின் நிர்வாக நடவடிக்கை ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.