கர்நாடகாவில் அரசு பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்; பயணிகள் பரிதவிப்பு
கர்நாடகாவில் அரசு பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்; பயணிகள் பரிதவிப்பு
ADDED : ஆக 05, 2025 09:03 AM

பெங்களூரு: கர்நாடகாவில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கி உள்ளதால் பஸ் பயணிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர்.
கர்நாடகாவில் இயங்கி வரும் 4 போக்குவரத்துக் கழகங்களைச் சேர்ந்த ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி வலியுறுத்தி வருகின்றனர். கோரிக்கைகள் நிறைவேற்றாத நிலையில், அவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை இன்று (ஆக.5) நடத்த போவதாக அறிவித்து இருந்தனர்.
போராட்ட அறிவிப்பை அடுத்து, போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் மாநில அரசுபேச்சுவார்த்தை நடத்தியது. அது தோல்வியில் முடிய, போராட்டத்துக்கு எதிராக அம்மாநில ஐகோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. வேலைநிறுத்த போராட்டத்தை நாளைய தினம் ஒத்தி வைக்க கோர்ட் உத்தரவு பிறப்பித்தது.
இதுதொடர்பான வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை இன்று நடைபெற உள்ள நிலையில், அறிவித்தபடி போக்குவரத்து கழக ஊழியர்கள் தங்களின் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை இன்று தொடங்கி உள்ளனர். இதன் காரணமாக அரசு பஸ்கள் எங்கும் இயங்கவில்லை.
முக்கிய நகரங்களான பெங்களூரு, சிக்மகளூரு, ராய்ச்சூ, தார்வார்ட, பெலகாவி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பஸ்கள் இயங்கவில்லை. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள், பஸ் நிலையங்களிலும், பஸ் நிறுத்தங்களிலும் காத்திருக்கின்றனர்.
அரசு பஸ்கள் இயங்காததால் தனியார் பஸ்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. போக்குவரத்து முடங்கி இருப்பதை காரணம் காட்டி ஆட்டோ, டாக்சி வாடகையை அதன் டிரைவர்கள் உயர்த்தி உள்ளதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். பல இடங்களில் பயணிகள், ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்கள் இடையே வாக்குவாதங்களும் ஏற்பட்டன.
பஸ் எப்போது வரும் என்று தெரியாமல் ஆயிரக்கணக்கானோர் பஸ் நிலையங்களில் குழப்பத்துடன் தவித்து வருகின்றனர். முன்பதிவு செய்யப்பட்ட பஸ்களின் கட்டணம் திருப்பித் தருவது பற்றிய எந்த அறிவிப்பும் இல்லை என்று அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.