ADDED : பிப் 08, 2024 12:57 AM
புதுடில்லி: பீஹார் முதல்வர் நிதீஷ் குமார் டில்லியில் பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசினார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து பீஹாரில் மீண்டும் ஆட்சியமைத்த பின் முதல்முறையாக இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதீஷ் குமார் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்., கட்சியுடன் கூட்டணி அமைத்து பீஹாரில் ஆட்சி செய்து வந்தார். இந்நிலையில் அந்த கூட்டணியில் இருந்து சமீபத்தில் விலகி பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மாறி மீண்டும் மாநில முதல்வராக பதவியேற்றார்.
வரும் 12ல் பீஹார் சட்டசபையில் பெரும்பான்மையை நிதீஷ் நிரூபிக்க வேண்டும். இந்த நிலையில் நேற்று டில்லியில் பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேசினார்.
தொடர்ந்து பா.ஜ., வின் மற்ற தலைவர்களையும் அவர் சந்தித்தார். பீஹாரில் ஆறு ராஜ்யசபா எம்.பி., இடங்கள் காலியாக உள்ளன. இதற்கான தேர்தல் வரும் 27ல் நடக்க உள்ள நிலையில் இது தொடர்பாக அவர் பா.ஜ., தலைவர்களுடன் பேசியதாக ஐக்கிய ஜனதா தள வட்டாரங்கள் தெரிவித்தன.
சமீபத்தில் பா.ஜ., கூட்டணியில் இணைந்த நிதீஷ் பிரதமரை சந்தித்து பேசியது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

