ADDED : ஆக 31, 2025 09:29 PM
புதுடில்லி:கால்காஜி கோவில் ஊழியர் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைக் கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளன.
டில்லி கால்காஜி காளிதேவி கோவிலில் உத்தர பிரதேச மாநிலம் ஹர்தோய் கிராமத்தைச் சேர்ந்த யோகேந்திரா சிங், 15 ஆண்டுகளாக வேலை செய்தார். கடந்த, 29ம் தேதி இரவு கோவிலுக்கு வந்த சிலர், சுவாமி தரிசனம் செய்தபின், யோகேந்திராவிடம் பிரசாதம் கேட்டனர். அவர் மறுத்தார். ஆத்திரமடைந்த அவர்கள் யோகேந்திராவிடம் வாக்குவாதம் செய்தனர்.
திடீரென கம்பு மற்றும் கையால் யோகேந்திராவை சரமாரியாகத் தாக்கினர். அவர் மயங்கி விழுந்ததும் அந்தக் கும்பல் தப்பியது. இந்த சம்பவம் கோவிலில் இருந்த கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி இருந்தன.
தகவல் அறிந்து வந்த போலீசார், மயங்கிக் கிடந்த யோகேந்திராவை எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதற்கிடையில், முக்கியக் குற்றவாளியான அதுல் பாண்டே, 30,வை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார்,
மோகன் என்ற பூரா, குல்தீப் பிதுரி, நிதின் பாண்டே மற்றும் அனில் குமார் ஆகிய நான்கு பேரையும் நேற்று முன் தினம் இரவு கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.