மோடி அருணாச்சல் பயணம் சீனாவின் எதிர்ப்புக்கு பதிலடி
மோடி அருணாச்சல் பயணம் சீனாவின் எதிர்ப்புக்கு பதிலடி
ADDED : மார் 13, 2024 01:02 AM
புதுடில்லி, 'அருணாச்சல பிரதேசம், முன்பும், இப்போதும், எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதி. இது தெரிந்திருந்தும், பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை ஏற்க முடியாது' என, சீனாவுக்கு இந்தியா பதிலளித்துள்ளது.
நம் அண்டை நாடான சீனா, தன் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தின் ஒரு பகுதி தான் அருணாச்சல பிரதேசம் என்று கூறி வருகிறது. இதற்கு மத்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், அருணாச்சல பிரதேசத்துக்கு பிரதமர் மோடி சமீபத்தில் பயணம் மேற்கொண்டார். இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது.
இதற்கு பதிலளித்து, நம் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளதாவது:
அருணாச்சல பிரதேசம், எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதி தான். இது சீனாவுக்கு பலமுறை தெளிவு படுத்தப்பட்டுள்ளது.
இருந்தாலும், நம் தலைவர்கள் அங்கு பயணம் செய்வதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதனால், உண்மை நிலவரத்தை மாற்ற முடியாது. அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதி என்பதால், அங்கு வளர்ச்சி பணிகளை தொடர்ந்து மேற்கொள்வோம்.
அதனால், அந்த பகுதிக்கு எங்கள் தலைவர்கள் செல்வது, வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வதை எதிர்ப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

