அரசியலமைப்புக்கு மட்டுமே விசுவாசமாக இருக்க வேண்டும்: தலைமை நீதிபதி அறிவுரை
அரசியலமைப்புக்கு மட்டுமே விசுவாசமாக இருக்க வேண்டும்: தலைமை நீதிபதி அறிவுரை
ADDED : ஏப் 06, 2024 02:53 PM

புதுடில்லி: ‛‛ நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் அரசியல் அமைப்புக்கு மட்டுமே விசுவாசமாக இருக்க வேண்டும்'' என, நீதிபதிகள், வழக்கறிஞர்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார்.
நூற்றாண்டு விழா
நாக்பூர் உயர்நீதிமன்ற பார் அசோஷியேசன் சங்கத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் பேசியதாவது: இந்தியா போன்ற துடிப்பான ஜனநாயக நாட்டில், பெரும்பாலான தனி நபர்களுக்கு அரசியல் கொள்கை அல்லது ஈர்ப்பு இருக்கும். மனிதர்கள், அரசியல் விலங்குகள் என அரிஸ்டாட்டில் கூறியுள்ளார். இதற்கு வழக்கறிஞர்கள் விதிவிலக்கு அல்ல. எப்படி இருப்பினும், பார் அசோஷியேசன் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும், மிக உயர்ந்த விசுவாசம் என்பது பாகுபாடான நலன்களுக்காக இருக்கக்கூடாது. நீதிமன்றம் மற்றும் அரசியலமைப்பு மீது இருக்க வேண்டும்.
தயாராக இருங்கள்
நீதித்துறையின் சுதந்திரத்திற்கும், பார் கவுன்சில் சுதந்திரத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதை மறந்து விடக்கூடாது. சுதந்திரமான பார் கவுன்சில் என்பது சட்டத்தின் ஆட்சி மற்றும் அரசியலமைப்பு நிர்வாகத்தைப் பாதுகாப்பதற்கான தார்மீக அரணாக செயல்படுகிறது. ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட உடன், அது பொது மக்களின் சொத்து ஆகிறது. அதற்காக பாராட்டுகளையும் விமர்சனத்தையும் ஏற்றுக் கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு சந்திரசூட் பேசினார்.

