வன்கொடுமை சட்டம் துஷ்பிரயோகம் வக்கீலுக்கு ஆயுள் தண்டனை
வன்கொடுமை சட்டம் துஷ்பிரயோகம் வக்கீலுக்கு ஆயுள் தண்டனை
ADDED : ஆக 21, 2025 03:58 AM

லக்னோ: தலித் பெண் வாயிலாக பாலியல் பலாத்காரம், வன்கொடுமை வழக்கு உட்பட 29 பொய் வழக்குகளை, தன் எதிரி மீது தாக்கல் செய்த வழக்கறிஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து லக்னோ நீதிமன்றம் உத்தரவிட்டது.
உத்தர பிரதேசத்தின் லக்னோவைச் சேர்ந்த வழக்கறிஞர் பரமானந்த குப்தா. சொத்து பிரச்னையில், தன் எதிரியான அரவிந்த் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஏராளமான வழக்குகளை தொடர்ந்திருந்தார். மேலும், பூஜா ராவத் என்ற தலித் பெண் வாயிலாக, 18 பாலியல் வழக்குகளையும் தாக்கல் செய்தார்.
இந்த வழக்குகளில் ஒன்றின் விசாரணை, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மார்ச் 5ல் நடந்த போது, போலீஸ் அறிக்கைகளை ஆய்வு செய்த நீதிபதிக்கு, 'ஜோடிக்கப்பட்ட வழக்காக இருக்கலாம்' என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, இந்த விவகாரத்தை சி.பி.ஐ., வசம், உயர் நீதிமன்றம் ஒப்படைத்தது.
விசாரணையில், அரவிந்த் குடும்பத்தினரை பழி வாங்க, தன் மனைவி சங்கீதா நடத்தும் அழகு நிலையத்தில் பணியாற்றிய பூஜா ராவத் என்ற தலித் பெண்ணை வழக்கறிஞர் பரமானந்த குப்தா பயன்படுத்தியது அம்பலமானது.
அரவிந்த் குடும்பத்தினருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு பூஜா இருந்தது, பரமானந்த குப்தாவுக்கு வசதியாக அமைந்தது. இதனால், அரவிந்த் குடும்பத்தினர் மீது மொத்தம் 29 பொய் வழக்குகளை தாக்கல் செய்திருக்கிறார்.
பூஜாவை சி.பி.ஐ., விசாரித்தபோது உண்மையை ஒப்புக் கொண்டார். இதையடுத்து, எஸ்.சி., - -எஸ்.டி., வன்கொடுமை சட்டத்தை தவறாக பயன்படுத்தி பொய் வழக்குகளை தாக்கல் செய்த பரமானந்த குப்தா மீது, லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நீதிமன்றத்தில் கடந்த 4ல் ஆஜரான பூஜா, 'பரமானந்த குப்தா, அவரது மனைவி சங்கீதாவின் மிரட்டலுக்கு பயந்து போலி புகார்களை கொடுத்தேன். அவர்களின் நிர்ப்பந்தத்தால், அரவிந்த் குடும்பத்தினர் என்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக, நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தேன்; என்னை மன்னித்து விடுங்கள்' என கூறினார்.
இதையடுத்து, தனக்கு பிடிக்காதவர்கள் மீது அடுக்கடுக்காக பொய் வழக்குகளை போட்ட வழக்கறிஞர் பரமானந்த குப்தாவுக்கு ஆயுள் தண்டனையும், 5.10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து லக்னோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர் வக்கீல் தொழில் செய்யவும் தடை விதித்தது.